4869. நீண்ட மறைகள் ஆகமங்கள் நெடுநாள் முயன்று வருந்திநின்று
வேண்ட அவைகட் கொருசிறிதும் விளங்கக் காட்டா தென்மொழியைப்
பூண்ட அடியை என்தலைமேல் பொருந்தப் பொருத்தி என்தன்னை
ஆண்ட கருணைப் பெருங்கடலே அடியேன் உன்றன் அடைக்கலமே.
உரை: புகழ் மிக்க வேதங்களும் சிவாகமங்களும் பலநாள் முயன்று வருந்தித் திருவடியைக் காட்டுமாறு வேண்டவும் அவற்றிற்கு ஒரு சிறிதும் விளங்குமாறு காட்டாமல் எளியேனுடைய புன்மொழிகள் அறிந்து சூழ்ந்த உன் திருவடியை என்னுடைய தலைமேல் நன்கு பொருந்த வைத்து எளியேனையும் ஆண்டருளுகின்ற கருணைக் கடலாகிய பெருமானே! அடியேன் உன்னை அடைக்கலமாகப் புகுந்தேன். எ.று.
பல்லாயிரம் ஆண்டுகளாகப் புகழ் பெற்று விளங்குவதால் வேதாகமங்களை, “நீண்ட மறைகள் ஆகமங்கள்” என்று புகழ்கின்றார். வைதிகர்களும் ஆகமானுசாரிகளும் பலகாலம் ஓதி யுணர்ந்துரைத்தும் இறைவன் திருவடி காண மாட்டா தொழிந்தமை புலப்பட, “நெடுநாள் முயன்று வருந்தி நின்று வேண்ட அவைகட்கு ஒருசிறிதும் விளங்கக் காட்டாது” என்று உரைக்கின்றார். தாம் பலவாகப் பாடி விரும்பிய பயன்களைப் பெற்று மகிழ்கின்றாராதலின் தம்முடைய பாட்டுக்களை இறைவன் திருவடியில் ஏற்று அருளுகின்றான் என்று எண்ணி இறும்பூ தெய்துகின்றமை தோன்ற, “என் மொழியைப் பூண்ட அடியை என் தலைமேல் பொருந்தப் பொருத்தி என்றன்னை ஆண்ட கருணைப் பெருங் கடலே” என்று மகிழ்கின்றார். (6)
|