4870. பாடுஞ் சிறியேன் பாட்டனைத்தும் பலிக்கக் கருணை பாலித்துக்
கோடு மனப்பேய்க் குரங்காட்டம் குலைத்தே சீற்றக் கூற்றொழித்து
நீடும் உலகில் அழியாத நிலைமேல் எனைவைத் தென்னுளத்தே
ஆடும் கருணைப் பெருவாழ்வே அடியேன் உன்றன் அடைக்கலமே.
உரை: பாட்டுக்களைத் தொடுக்கும் சிறியோனாகிய என்னுடைய பாட்டுக்கள் யாவும் பயன் விளைவிக்குமாறு அருள் புரிந்து நெறி பிறழ்ந்து ஓடுகின்ற மனமாகிய பேய்க்குரங்கின் ஆட்டத்தை ஒடுக்கிக் கோபமாகிய நமனை வீழ்த்தி நீண்ட இவ்வுலகில் அழிவில்லாத மேல் நிலையில் என்னை வைத்து எளியவனுடைய மனமாகிய சபையின்கண் திருக்கூத்தாடி அருளும் கருணையுருவாகிய பெருவாழ்வருளும் சிவனே! அடியேன் உன்பால் அடைக்கலமாயினேன். எ.று.
பாடும் பாட்டுக்கள் கருதிய பயனை நல்குவதை உணருகின்றாராதலால், “சிறியேன் பாடும் பாட்டனைத்தும் பலிக்க” எனவும், அதனால் தம்பால் திருவருள் நலம் நிலவுவதறிந்து, “கருணை பாலித்து” எனவும் இயம்புகின்றார். பாடும் பணியில் ஈடுபடுங்கால் மனத்தின்கண் ஒருமையும் சீற்றம் முதலிய குற்றங்கள் உளவாகாமையின் தேர்ந்து உரைக்கின்றாராதலின் வடலூர் வள்ளல், “கோடும் மனப்பேய்க் குரங்காட்டம் குலைத்து” என்றும், “சீற்றக் கூற்று ஒழித்து” என்றும் கூறுகின்றார். ஒருநெறியில் நில்லாமல் பலதலையாய் அலைவது பற்றி, “கோடும் மனம்” எனவும், பேய்க் கோட்பட்ட குரங்கு போல அலைவது பற்றி, மனத்தை, “மனப் பேய்க் குரங்காட்டம்” எனவும் எடுத்துரைக்கின்றார். கோபத்தால் உயிர்க்கொலை முதலியன நிகழ்தல் பற்றி அதை, “சீற்றக் கூற்றம்” எனத் தெரிவிக்கின்றார். உலகியலில் செல்லாமல் தமது உள்ளமும் உரையும் சிவபெருமானுடைய திருவருள் இன்பத்தில் தோய்ந்து கிடக்கும் தமது அருள் நிலையை உணர்ந்து வியக்கின்றாராதலின் தமது நிலையை, “நீடும் உலகில் அழியாத நிலை” என்றும், திருவுள்ளத்தே இறைவன் திருக்கூத்தாடுவதை உணர்ந்து கண்டு உவக்கின்றமை புலப்படச் சிவனை, “என் உள்ளத்தே ஆடும் கருணைப் பெருவாழ்வே” என்றும் போற்றுகின்றார். (7)
|