பக்கம் எண் :

4873.

    பிச்சங் கவரி நிழற்றியசைத் திடமால் யானைப் பிடரியின்மேல்
    நிச்சம் பவனி வருகின்ற நிபுணர் எல்லாம் தொழுதேத்த
    எச்சம் புரிவோர் போற்றஎனை ஏற்றா நிலைமேல் ஏற்றுவித்தென்
   அச்சந் தவிர்த்தே ஆண்டுகொண்டோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.

உரை:

     பிச்சமும் கவரியும் நிழல் செய்து அசைய பெரிய யானையின் கழுத்தின் மேல் அமர்ந்து நாள்தோறும் உலா வருகின்ற பெருஞ் செல்வர் எல்லாரும் தொழுது போற்ற தவம் புரிவோர் பலரும் போற்றித் துதிக்க என்னை மிக உயர்ந்த இன்ப நிலையின்கண் உயர்த்தி வைத்து என்னுடைய அச்சத்தையும் போக்கி அருளி ஆண்டு கொண்டாய்; ஆதலால் அடியேன் உனக்கு அடைக்கலமாயினேன். எ.று.

     பிச்சம் - மயிர்ப்பீலியால் அமைந்த தண்குடை. கவரி - வெண் சாமரை. பிச்சம் நிழல் செய்ய சாமரை மெல்ல அசைந்து மென்காற்று வீச யானையின் கழுத்தின் மேல் இவர்ந்து உலா வருதல் பெருஞ் செல்வர்க்கு இயல்பாதலின் அவர்களை, “பிச்சம் கவரி நிழற்றி அசைத்திட மால்யானைப் பிடரியின் மேல் நிச்சம் பவனி வருகின்ற நிபுணர்” என்று குறிக்கின்றார். மால் - யானை. பிடரி - பெரிய யானையின் கழுத்து. நிச்சம் நாள் தோறும். பவனி - உலா. பிறவி தோறும் தொடரும் சிறப்புடையதாகலின் தவச் செல்வர்களை, “எச்சம் புரிவோர்” என்று கூறுகின்றார். எச்சம் - ஈண்டுத் தவத்தின் மேற்று. பிறவிதோறும் தொடர்வதாதலால், “நற்றவம் எச்சம்” எனப்படுகின்றது. நிலையா உலகியலில் இருந்து பயின்றமையால் திருவருள் ஞான இன்ப நிலை எய்தியபோதும் நிலையான அச்சம் நெஞ்சில் நின்று நிலவுவது தோன்ற, “அச்சம் தவிர்த்தே ஆண்டு கொண்டோய்” என்று துதிக்கின்றார்.

     (10)