4874. இருளைக் கெடுத்தென் எண்ணமெலாம் இனிது முடிய நிரம்புவித்து
மருளைத் தொலைத்து மெய்ஞ்ஞான வாழ்வை அடையும் வகைபுரிந்து
தெருளைத் தெளிவித் தெல்லாஞ்செய் சித்தி நிலையைச் சேர்வித்தே
அருளைக் கொடுத்தென்தனை ஆண்டோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
உரை: மலங்கள் விளைவிக்கும் இருளைப் போக்கி என் எண்ணமெல்லாம் இனிது கைக்கூட நிறைவித்து அஞ்ஞானத்தால் உண்டாகும் மருட்சியை நீக்கி மெய்ஞ்ஞான வாழ்வை அடையும் தகுதியை எனக்கு அருள் செய்து என் மனத்தின்கண் தெளிவு நிலைபெறுவித்து எல்லாம் செய்யவல்ல சித்தி நிலையை யான் அடையச்செய்து திருவருள் ஞானத்தையும் கொடுத்து என்னை ஆண்டருளினாய்; ஆகையால் அடியேன் உனக்கு அடைக்கலமாயினேன். எ.று.
மலமாயை கன்மங்களால் விளையும் அறிவு மறைப்பு ஞானத்திரோதகம்; ஈண்டு இருள் எனப்படுகின்றது. மருள் - அறிவுத் தெளிவின்மை. மெய்ஞ்ஞான வாழ்வு பெறுதற்குத் தகுதி இன்றியமை யாமையின் அதனைத் தமக்கு நல்கியதை விதந்து “மெய்ஞ்ஞான வாழ்வை அடையும் வகை புரிந்து” என்று விளம்புகின்றார். தெருள் - ஞானம்; பெறுதற்கேற்ற தெளிவு. எல்லாம் செய் சித்தி நிலை - கன்ம யோக ஞான சித்தி நிலைகள். (11)
|