105. இறை வரவு இயம்பல்
அஃதாவது, ஞான யோகத்தில் சிவத்தின் அருள் காட்சி பெறும் மரபு பற்றிக் காட்சி பெற்று இன்புறும் விழைவு முந்துதலால் அருட் காட்சிக்கு உரிய காலம் எய்திற்று என உணர்ந்து அதற்குச் சமையுமாறு மனத்துக்கு எடுத்துரைக்கும் கருத்தும் காட்சியால் தமக்கு விளையும் பயனும் எடுத்துரைப்பது.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 4875. அப்பன்வரு தருணம்இதே ஐயம்இலை கண்டாய்
அஞ்சாதே அஞ்சாதே அகிலமிசை உள்ளார்க்
கெய்ப்பறவே சத்தியம்என் றுரைத்திடுநின் உரைக்கோர்
எள்ளளவும் பழுதுவரா தென்னிறைவன் ஆணை
இப்புவியோ வானகமும் வானகத்தின் புறத்தும்
எவ்வுயிரும் எவ்வெவரும் ஏத்திமகிழ்ந் திடவே
செப்பம்உறு திருவருட்பேர் ஒளிவடிவாய்க் களித்தே
செத்தாரை எழுப்புதல்நாம் திண்ணம்உணர் மனனே.
உரை: மனமே, தந்தையாகிய சிவ பரம்பொருள் தமது அருட் காட்சியை வழங்க நம்பால் வருதற்குரிய காலம் இதுவாகும்; அதில் சிறிதும் ஐயமில்லை; நீயும் அஞ்சுதல் வேண்டாம்; உலகில் உள்ளவர்களுக்குத் தளர்ச்சி இன்றாக இது உண்மை என்று சொல்லுவாயாக; உன்னுடைய சொல்லுக்கு எள்ளத்தனையும் குற்றம் உண்டாகாது; இது என்னுடைய இறைவனது ஆணை என்று அறிவாயாக; இம் மண்ணுலகத்தவரும் வானவரும் வானுலகத்துக்கு அப்பால் உள்ளவரும் யாவரும் எவ்வகை உயிரும் துதித்து மகிழ்ந்திடுமாறு செம்மை சான்ற திருவருள் பேரொளி படைத்த வடிவத்துடன் மகிழ்ச்சி கொண்டு செத்தாரை நாம் எழுப்புவது திண்ணம் என்று உணர்வாயாக. எ.று.
சிவயோக நிலையில் சிவப் பேற்றின் விழைவு உள்ளத்தில் எழுவது உணர்ந்துரைப்பது தோன்ற, “அப்பன் வருதருணம் இதே ஐயமிலை கண்டாய்” என்று மனத்துக்கு உரைக்கின்றார். இறைவனது வரவு எய்துமோ எய்தாது ஒழியுமோ என்று அச்சமோ ஐயமோ கொள்ளலாகாது என வற்புறுத்தற்கு, “அகில மிசை உள்ளார்க்கு எய்ப்பறவே சத்தியம் என்று உரைத்திடு” எனப் பணிக்கின்றார். அகிலம் - உலகம். யோகக் காட்சி உடையார்க்கு இறைவனது வரவு உறுதி என்பதை மேலும் வற்புறுத்தற்கு, “நின் உரைக்கு ஓர் எள்ளளவும் பழுது வராது” என்றும், அக்காட்சிப் பயனாக நாம் அருளொளி வடிவு கொண்டு செத்தாரை எழுப்புவது இயலும்; இது திண்ணம் என்று உணர்த்துவாராய், “செப்பமுறு திருவருட் பேரொளி வடிவாய் நாம் செத்தாரை எழுப்புதல் திண்ணம்” என உரைக்கின்றார். செத்தார் - தூல உடம்பிலிருந்து நீங்கினவர். அவர்கள் மீள எழும்பொழுது பேரருள் ஒளி வடிவாய் எழுவர் என்றும், அதுகண்டு அருளாளர் அனைவரும் மகிழ்வர் என்றும் உரைப்பது கருத்தாதல் தெளிக. எய்ப்பு - தளர்தல். செப்பம் - செம்மை. செத்தாரை எழுப்புவது பற்றி அறிஞர் சொற் பொருளோடு ஒழிவதும் வேறு பொருள் காண்பதும் உண்டு; அவர்கட்கு இப்பாட்டுரை தெளிவு நல்குவதாம். (1)
|