பக்கம் எண் :

4876.

     இறைவன்வரு தருணம்இதே இரண்டிலைஅஞ் சலைநீ
          எள்ளளவும் ஐயமுறேல் எவ்வுலகும் களிப்ப
     நிறைமொழிகொண் டறைகஇது பழுதுவரா திறையும்
          நீவேறு நினைத்தயரேல் நெஞ்சேநான் புகன்ற
     முறைமொழிஎன் னுடையவன்தான் மொழிந்தமொழி எனக்கோர்
          மொழிஇலைஎன் உடலாவி முதல்அனைத்தும் தானே
     பொறையுறக்கொண் டருட்ஜோதி தன்வடிவும் உயிரும்
          பொருளும்அளித் தெனைத்தானாப் புணர்த்தியது காணே.

உரை:

     நெஞ்சமே! இறைவன் எழுந்தருளும் தருணம் இதுவாகும்; இச்சொல்லில் இரண்டில்லை; அஞ்ச வேண்டா; நீயும் என் சொல்லில் எள்ளத்தனையும் ஐயப்படாதே; எல்லா உலகத்தோரும் கேட்டு மகிழும்படி என் சொல்லின் நிறைமொழி என்று கொண்டு சொல்லுவாயாக; இச்சொல்லின்கண் சிறிதும் குற்றமுண்டாகாது; வேறுபட நினைத்து வருந்த வேண்டாம்; நான் சொன்ன சொற்கள் முறையாகச் சொல்லப்படவை; அவையும் என்னை உடையவனாகிய இறைவன் தானே மொழிந்த மொழியாகும்; எனக்கு எனத் தனியே ஓர் மொழி இல்லை; என் உடல் உயிர் ஆகிய யாவும் தானே பொறுப்பாக ஏற்றுக் கொண்டு அருட் சோதியாகிய பெருமான் தன்னுடைய வடிவத்தையும் உயிரையும் பொருளையும் எனக்களித்து என்னைத் தானாக உருவாக்கிக் கொண்டான் என அறிக. எ.று.

     சொல்லும் சொற்களில் பொய்ம்மை மெய்ம்மை என இரு தன்மை இல்லை என்பாராய், “இரண்டிலை அஞ்சலை” என்று கூறுகின்றார். நிறைமொழி - கருதிய பயனைக் கருதியவாறு பயக்கும் மொழி. அருளிக் கூறினும் வெகுண்டுக் கூறினும் அவ்வப் பயனை பயந்தே விடும் மொழி நிறைமொழி என்பர் பரிமேலழகர். முறைமொழி - முறையாக உரைக்கும் சொல். நான் உரைக்கும் சொற்களை நானே எண்ணி உரைப்பதாகக் கொள்ளாமல் இறைவனே என்னுள் நின்று உரைப்பதாகக் கொள்க என வெளிப்பட மொழிகின்றாராதலின், “நான் புகன்று முறைமொழி என் உடையவன் தான் மொழிந்த மொழி; எனக்கோர் மொழி இல்லை” என்று கூறுகின்றார். இங்ஙனம் உரைப்பதற்கு ஏது தன்னுடைய கருவி கரணங்கள் அனைத்தும் சிவகரணங்களாயினமை எனத் தெரிவிப்பதற்கு, “என் உடல் ஆவி முதல் அனைத்தும் தானே பொறையுறக் கொண்டு அருட்சோதி தன் வடிவும் உயிரும் பொருளும் அளித்து எனைத் தானாப் புணர்த்தியது காண்” என்று சாற்றுகின்றார். பொறையுறக் கொள்வதாவது தனக்கு உடைமையாகக் கொள்வது. தானாப் புணர்த்தியது - சிவமாந் தன்மை என ஆக்குவது.

     (2)