பக்கம் எண் :

4878.

     எல்லாஞ்செய் வல்லதனிப் பெருந்தலைமைச் சித்தன்
          எனமறைஆ கமம்புகலும் என்இறைவன் மகிழ்ந்தே
     நல்லார்கள் வியக்கஎனக் கிசைத்தபடி இங்கே
          நான்உனக்கு மொழிகின்றேன் நன்றறிவாய் மனனே
     பல்லாரும் களிப்படையப் பகல்இரவும் தோற்றாப்
          பண்பின்அருட் பெருஞ்சோதி நண்பினொடு நமக்கே
     எல்லாநன் மைகளும்உற வருதருணம் இதுவே
          இவ்வுலகம் உணர்ந்திடநீ இசைத்திடுக விரைந்தே.

உரை:

     எல்லாம் செய்ய வல்ல தனிப் பெருந்தலைமையுடைய ஞான மூர்த்தி என வேதங்களும் ஆகமங்களும் பாராட்டுகின்ற என்னுடைய இறைவன் மனம் மகிழ்ந்து உலகிலுள்ள நல்லவர்கள் எல்லோரும் வியக்கும்படி எனக்கு உரைத்தவண்ணமே இங்கே நான் உனக்குச் சொல்லுகின்றேன்; மனமே, நான் சொல்வதை நன்றாக அறிந்துகொள்வாயாக; பலரும் மகிழும்படிப் பகல் இரவுகள் தெரியாத பண்பமைந்த அருட்பெருஞ்சோதி ஆண்டவன் நட்புறவு கொண்டு நமக்கு எல்லா நன்மைகளும் உண்டாக நம்பால் எழுந்தருளும் தருணம் இதுவாகும்; இதனை உலகவர் அனைவரும் உணருமாறு முற்பட்டு நீ விளம்புவாயாக. எ.று.

     ஞானத்தால் மிக்கவர் எல்லார்க்கும் தலைவனாதலால் சிவபெருமானை, “எல்லாம் செய் வல்ல பெருந் தலைமைச் சித்தன்” என்று புகழ்கின்றார். சித்தன் - ஞானவான். வரம்பில் ஆற்றலும் தனிப் பெருந் தலைமையும் உடையவன் என்றற்கு, “எல்லாம் செய் வல்ல தனிப் பெருந் தலைமைச் சித்தன்” என்று கூறுகின்றார். இது எல்லா வேதங்களிலும் ஆகமங்களிலும் எடுத்தோதப்படுவது பற்றி, “மறையாகமம் புகலும் என் இறைவன்” என்று புகழ்கின்றார். அப்பெருமான் அருளியவாறு வடலூர் வள்ளல் தம்முடைய மனத்துக்கு உரைக்கின்றாராதலால் இங்கே, “நான் உனக்கு மொழிகின்றேன் நன்றறிவாய் மனனே” என்று கூறுகின்றார். அவ்வுரையைக் கேட்டவிடத்து உலகத்து மக்கள் பலரும் பெருமகிழ்ச்சி அடைவர் என்பாராய், “பல்லாரும் களிப்படைய” என்றும், பரமன் எழுந்தருளும் இன்பநிலை இராப் பகல் இல்லாத ஆனந்த நிலை என்பதற்கு, “பகல் இரவும் தோற்றாப் பண்பின் இன்ப நிலை” என்றும், அப்பெருமானே “அருட்பெருஞ்சோதி” என்றும் எடுத்துரைக்கின்றார். அப்பெருமான் எழுந்தருளுகின்ற காலம் யாவர்க்கும் எல்லா நன்மைகளும் எய்தும் இன்பக் காலம் என்றும், அதனை உலகு அறிய உரைக்கவேண்டும் என்றும் சொல்வாராய், “எல்லா நன்மைகளும் உற வருதருணம் இதுவே இவ்வுலகம் உணர்ந்திட நீ இசைத்திடு” என்று உரைக்கின்றார்.  

     (4)