பக்கம் எண் :

4879.

     கருநாள்கள் அத்தனையும் கழிந்தன நீசிறிதும்
          கலக்கமுறேல் இதுதொடங்கிதக் கருணைநடப் பெருமான்
     தருநாள்இவ் வுலகம்எலாம் களிப்படைய நமது
          சார்பின்அருட் பெருஞ்ஜோதி தழைத்துமிக விளங்கும்
     திருநாள்கள் ஆம்இதற்கோர் ஐயம்இலை இதுதான்
          திண்ணம்இதை உலகறியத் தெரித்திடுக மனனே
     வருநாளில் உரைத்திடலாம் எனநினைத்து மயங்கேல்
          வருநாளில் இன்பமயம் ஆகிநிறை வாயே.

உரை:

     பிறப்பிறப்புக்குரிய நாட்கள் அத்தனையும் ஒழிந்துவிட்டன; அவற்றை நினைந்து நீ சிறிதும் கலக்கம் கொள்ள வேண்டாம்; இன்று தொடங்கும் நாட்கள் யாவும் அருட் கூத்து இயற்றும் பெருமானாகிய சிவன் தந்த பெருநாட்களாய் இவ்வுலகத்தில் உள்ள உயிர்கள் யாவும் மகிழ்ச்சி அடையுமாறு நமது சார்பில் அருட்பெருஞ்சோதி பெருகி நன்மை மிகும்படி விளங்கும் திருநாட்களாகும்; இதற்கு ஒருவிதச் சந்தேகமும் இல்லை; இது உறுதி. இதனை உலகவர் யாவரும் அறிய விளம்புவாயாக; மனமே, இனி வரும் நாட்களில் இவ்வுண்மையை உரைக்கலாம் என எண்ணி மயங்குதல் வேண்டா; மேல் வரும் அந்நாட்களில் நீ இன்ப மயமாய் நிறைந்து விளங்குவாய். எ.று.

     பிறப்புக்கும் இறப்புக்கும் இடமாகிய நாட்கள் அத்தனையும் பிறப்பிறப்புக்கு ஏதுவாவனவாதலின், அவற்றோடு உனக்குத் தொடர்பில்லை என்பாராய், “கருநாட்கள் அத்தனையும் கழிந்தன” எனவும், அவற்றால் தாக்கப்படுவோமோ என்று மனம் கலங்க வேண்டாம் என்றற்கு, “நீ சிறிதும் கலக்கமுறேல்” எனவும் கூறுகின்றார். சிவ யோகப் போகத்தை அனுபவிக்க வரும் நாட்களைக் “கருணை நடப்பெருமான் தருநாள்” என்று தெளிவுறுத்துகின்றார். அக்காலத்தே சிவனது அருட்பெருஞ்சோதி எங்கும் எவரிடத்தும் பரவி இன்பம் எய்துவிக்கும் என விளம்புவாராய், “அருட்பெருஞ்சோதி தழைத்து மிக விளங்கும் திருநாட்களாம்” என்று தெரிவிக்கின்றார். சிவபோக நுகர்ச்சிக்கண் மனம் வாக்கு முதலிய கரணங்கள் இன்ப மயமாய் நிறைந்து செயலற்றொழிவது தோன்ற, “வருநாளில் இன்ப மயமாகி நிறைவாய்” என்று கூறுகின்றார்.

     (5)