488. சதிசெயும் மங்கையர் தமது கண்வலை
மதிகெட வழுங்கியே வணங்கு நெஞ்சமே
நிதிசிவ சண்முக வென்று நீறிடில்
வதிதரு முலகிலுன் வருத்தம் தீருமே
உரை: வஞ்சனை செய்யும் மகளிருடைய காமப் பார்வையாகிய வலையில் சிக்கி அறிவு மழுங்குதலால் துன்புற்று அவர்களின் அடி பணியும் மனமே, திருவருட் செல்வமாகிய சண்முகா என்று நினைந்து நாவால் ஓதித் திருநீற்றை அணிந்து கொண்டால், நீ வாழும் இவ்வுலகில் உனது வருத்த மெல்லாம் போய் விடும், காண், எ. று.
சதி, வஞ்சனை மோசம் முதலிய தீமைகள். கண்வலை - காமப்பார்வை. காமப் பார்வைக்குள் அகப்பட்டு மனத்தை யிழந்தவர் அறிவு நிறையழிந்து கெடுவதால், “மங்கையர் தமது கண்வலை மதிகெட” எனவும், வருந்தி அம்மகளிரின் சினமும் பிணக்கமும் போக்குதற்கு வணக்கமும் செய்வ தியல்பாதலை நோக்கி, “அழுங்கி வணங்கும் நெஞ்சமே” எனவும் உரைக்கின்றார். நிதி - அருட் செல்வம். வாழும் உலகு என்றற்கு, “வதிதரும் உலகு” எனக் கூறுகின்றார். இவ்வுலகில் துன்பமின்றி இனிது வாழ்பவர் அம்மை யுலகில் அயரா வின்பம் பெறுவர் என்பதனால், “வதிதரும் உலகில் உன் வருத்தம் தீரும்” என அறிவுறுத்துகின்றார்.
இதனால், சண்முகா என்று நினைந்து ஓதித் திருநீற்றை யணிந்து கொண்டால் இவ்வுலகில் வருத்த மெல்லாம் நீங்கும் என அறிவுறுத்தியவாறாம். (9)
|