பக்கம் எண் :

4880.

     உள்ளபடி உரைக்கின்றேன் சத்தியமாம் உரையீ
          துணர்ந்திடுக மனனேநீ உலகமெலாம் அறிய
     வள்ளல்வரு தருணம்இது தருணம்இதே என்று
          வகுத்துரைத்துத் தெரிந்திடுக மயக்கம்அணுத் துணையும்
     கொள்ளலைஎன் குருநாதன் அருட்ஜோதிப் பெருமான்
          குறிப்பிதுஎன் குறிப்பெனவும் குறியாதே கண்டாய்
     நள்ளுலகில் இனிநாளைக் குரைத்தும்எனத் தாழ்க்கேல்
          நாளைதொட்டு நமக்கொழியா ஞானநடக் களிப்பே.

உரை:

     மனமே! உண்மையை உள்ளபடி உரைக்கின்றேன்; இவ்வுரை சத்தியமாகும் என உணர்வாயாக; நீ இந்த உலகத்தார் எல்லாரும் அறிய வள்ளலாகிய சிவபெருமான் எழுந்தருளும் காலம் இதுவே இதுவே என்று வகுத்துச் சொல்லி விளக்குவாயாக; இவ்வுரையின்கண் அணுவளவும் சந்தேகம் கொள்ள வேண்டாம்; நான் சொல்லும் இது நமக்குக் குருமுதல்வனும் அருட்சோதி ஆண்டவனுமாகிய சிவனுடைய திருவுள்ளக் கருத்து எனவும் என் கருத்தன்று எனவும் உணர்வாயாக; இவ்வுலகத்தில் நாம் நாளைக்கு உரைக்கலாம் எனக் காலதாமதம் செய்ய வேண்டாம்; நாளை முதல் சிவத்தின் நன்ஞான நாடகக் காட்சியில் பெருகும் இன்பத்தில் இடையறவு படாது மூழ்கி விடுவேம் என அறிக. எ.று.

     உண்மையை உரைக்கின்றேன் என்பாராய், “உள்ளபடி உரைக்கின்றேன்” என்றும், இதனை மேலும் வற்புறுத்தற்கு, “சத்தியமாம் உரை ஈதே” என்றும் இயம்புகின்றார். கேட்பார் வினாக்களுக்கு அன்புடன் தக்க விடை யளித்து விளக்குதல் வேண்டும் என்பாராய், “வகுத்துரைத்துத் தெரித்திடுக” என்று கூறுகின்றார். தாம் உரைப்பன அனைத்தும் தாமாக நினைந்து புனைந்து உரைப்பன அல்ல; அருட்சோதி ஆண்டவனுடைய அருளுரை எனத் தெளிவித்தற்கு, “என் குருநாதன் அருட்சோதிப் பெருமான் குறிப்பு இது என் குறிப்பெனக் குறியாதே” என்று இயம்புகின்றார். ஞான வின்பத்தில் தோய்ந்தொழியும் கரணங்கள் இன்ப மயமாய்ச் செயலறுதல் பற்றி, “நாளை தொட்டு நமக்கு ஒழியா ஞான நடக் களிப்பே” என்று நவில்கின்றார்.

     (6)