4882. மாற்றுரைக்க முடியாத திருமேனிப் பெருமான்
வருதருணம் இதுகண்டாய் மனனேநீ மயங்கேல்
நேற்றுரைத்தேன் இலைஉனக்கிங் கிவ்வாறென் இறைவன்
நிகழ்த்துகஇன் றென்றபடி நிகழ்த்துகின்றேன் இதுதான்
கூற்றுதைத்த திருவடிமேல் ஆணைஇது கடவுள்
குறிப்பெனக்கொண் டுலகம்எலாம் குதுகலிக்க விரைந்தே
சாற்றிடுதி வருநாளில் உரைத்தும்எனத் தாழ்க்கேல்
தனித்தலைவன் அருள்நடஞ்செய் சாறொழியா இனியே.
உரை: மாற்றுக் காண முடியாத பொன் மேனியையுடைய சிவ பெருமான் எழுந்தருளும் காலம் இதுவாகும்; மனமே, நீ இதில் ஐயமுறுதல் ஒழிக; இதனை நான் உனக்கு நேற்று உரைத்தேனில்லை இன்று உனக்கு இவ்வாறு சொல்லுக என இறைவன் எனக்கு உரைத்தருளினான்; ஆதலின் நான் இப்போது சொல்லுகின்றேன்; நான் சொல்லும் இது அப்பெருமானுடைய கூற்றம் குமைத்த திருவடிமேல் ஆணையாக உரைப்பதாகும்; இது கடவுளின் திருவருள் குறிப்பு என உள்ளத்திற்கொண்டு உலகவர் பலரும் கேட்டு மனம் களிக்க விரைந்து எடுத்துரைப்பாயாக; அவன் வரும் நாளில் உலகிற்கு உரைக்கலாம் எனக் காலதாமதம் செய்யாதே; ஒப்பற்ற தலைவனாகிய கூத்தப்பெருமான் திருவருள் நடனம் புரியும் திருவிழா இடையறவு படாது காண். எ.று.
சிவபெருமான் பொன் போலும் திருமேனியுடையவனாதலால் அவனுடைய மேனிப் பொன்னிறம் மாற்றுக் காண முடியாத மாண்புடையது என்று உரைத்தற்கு, “மாற்றுரைக்க முடியாத திருமேனிப் பெருமான்” என்று புகழ்கின்றார். பிற இடங்களிலும் மாற்றுரைக்க முடியாத செழும் பசும்பொன்னே என்று வள்ளற்பெருமான் பாராட்டி உரைப்பர். நேற்று முன்தினம் அல்ல இன்றுதான் தாம் வரும் தருணத்தை விரித்தருளினார் என்றற்கு, “நேற்று உரைத்தேன் இலை உனக்கு இங்கு இவ்வாறு என் இறைவன் நிகழ்த்துக இன்று என்றபடி நிகழ்த்துகின்றேன் இதுதான்” என்று இயம்புகின்றார். நான் கூறும் இது திருவடி மேல் ஆணையாகும் என யாப்புறுத்தற்கு, “இதுதான் கூற்றுதைத்த திருவடி மேல் ஆணை” என்றும், மேலும் இது கடவுளாகிய சிவனது திருவுள்ளக் கருத்து என உள்ளத்தில் உறுதியாகக் கொண்டு கேட்கும் உலகத்தவர் மனம் பெருமகிழ்ச்சி கொள்ளுமாறு ஊர்தோறும் தெருதோறும் வீடுதோறும் சென்று விளம்புக என்னும் கருத்துப் புலப்பட, “இது கடவுள் குறிப்பு எனக்கொண்டு உலகமெல்லாம் குதூகலிக்க விரைந்து சாற்றிடுதி நீ” என்றும், சிறிது காலம் தாமதிப்பதற்கும் இடமில்லை என்பாராய், “தாழ்க்கேல் தனித் தலைவன் அருள் நடஞ்செய் சாறொழியா” என்றும் இயம்புகின்றார். (8)
|