4884. தனித்தலைவன் எல்லாஞ்செய் வல்லசித்தன் ஞான
சபைத்தலைவன் என்உளத்தே தனித்திருந்துள் உணர்த்தக்
கனித்தஉளத் தொடும்உணர்ந்தே உணர்த்துகின்றேன் இதைஓர்
கதைஎனநீ நினையேல்மெய்க் கருத்துரைஎன் றறிக
இனித்தஅருட் பெருஞ்ஜோதி ஆணைஎல்லாம் உடைய
இறைவன்வரு தருணம்இது சத்தியமாம் இதனைப்
பனித்தவுல கவர்அறிந்தே உய்யும்வகை இன்னே
பகர்ந்திடுக நாளைஅருட் பரமசுகச் சாறே.
உரை: ஒப்பற்ற தலைவனும் எல்லாம் செயல் வல்ல அறிவனும் ஞான சபைக்குத் தலைவனுமாகிய சிவபெருமான் என் உள்ளத்தில் தனித்து எழுந்தருளி இருந்து உள்ளுற உணர்த்தியதால் அன்பால் நெகிழ்ந்த மனத்தோடு அத்திருமொழியின் சிறப்பை உள்ளத்தில் உணர்ந்து மனமே நான் உனக்கு உரைக்கின்றேன்; யான் உரைக்கும் இதனைப் பொய்க் கதையாம் என்று நினைத்தல் வேண்டா; உண்மைக் கருத்துரை என்று அறிவாயாக: இன்பம் செய்யும் அருட் பெருஞ் சோதியாகிய இறைவனது ஆணையாகும்; உலகமெல்லாம் தனக்கு உடைமையாக உடைய சிவபெருமான் நம்பால் எழுந்தருளும் காலம் இதுவாகும்; இது சத்தியம்; இதனை அன்பால் குளிர்ந்த மனமுடைய உலகத்தவர் கேட்டறிந்து உய்யும் பொருட்டு நாளை பரம சுகபோகத்தை நுகரும் திருவிழாவாதலின் இன்றே உலகவர்க்கு உரைப்பாயாக. எ.று.
தேவதேவர்கள் சிரம் குனிந்து வணங்கும் தலைவனாதலின், “தனித் தலைவன்” என்றும், வரம்பில் ஆற்றல் உடையவனாதலின், “எல்லாம் செய்வல்ல சித்தன்” என்றும், ஞான சபையில் தனித்து நின்றாடும் பரமனாதலால், “ஞான சபைத் தலைவன்” என்றும் நவில்கின்றார். அப்பெருமான் தனி ஒருவனாய் வந்து என் உள்ளத்தில் எழுந்தருளி நான் இனிது உணருமாறு எனக்கு உரைத்தருளினான் என்பாராய், “என் உளத்தே தனித்திருந்து உள்ளுணர்த்த உணர்ந்து உரைக்கின்றேன்” எனத் தெளிய உரைக்கின்றார். அவனது காட்சியும் மொழியும் வள்ளற் பெருமானுடைய உள்ளத்தில் அன்பு நிறைவித்து உருக்கம் பெருகுவித்தமை புலப்பட, “கனிந்த உளத்தொடு” என்று விளக்குகின்றார். தாம் உரைப்பது பொய்யே புனைந்த கற்பனைக் கதை எனக் கருதுதல் ஆகாது; மெய்ம்மை உரை என்று கொள்ளல் வேண்டும் என்றற்கு, “இதை ஓர் கதை என நினையேல் மெய்க்கருத்துரை” என்று மொழிந்து, மேலும் அதன் வாய்ம்மையை வற்புறுத்தற்கு, “இனித்த அருட் பெருஞ் சோதி ஆணை” என உரைக்கின்றார். பனித்தல் - ஈண்டு அன்பால் உள்ளம் குளிர்தல். இறைவன் திருவருள் காட்சி பெற்று இன்புறும் திறத்தைப் “பரம சுகச் சாறு” எனப் பகர்கின்றார். சாறு - சிவ போகத்தை நுகரும் திருநாள். (10)
|