பக்கம் எண் :

4887.

     நிலந்தெளிந் ததுகண மழுங்கின சுவண
          நீடொளி தோன்றிற்றுக் கோடொலிக் கின்ற
     அலர்ந்தது தாமரை ஆணவ இருள்போய்
          அழிந்தது கழிந்தது மாயைமால் இரவு
     புலர்ந்தது தொண்டரோ டண்டரும் கூடிப்
          போற்றியோ சிவசிவ போற்றிஎன் கின்றார்
     இலங்குரு வளித்தஎன் அருட்பெருஞ் சோதி
          என்குரு வேபள்ளி எழுந்தருளாயே.

உரை:

     நிலவுலகம் இருள்நீங்கித் தெளிவடைந்து விட்டது; இருட் கூட்டம் நீங்கிவிட்டன; சூரியனுடைய நெடிய பொற் கரணங்கள் தோன்றிவிட்டன; சங்குகள் முழங்குகின்றன; தாமரைகள் மலர்ந்துவிட்டன; ஆணவமாகிய இருளும் போய் ஒழிந்தது; மாயையாகிய பெரிய இரவும் நீங்கிவிட்டது; தொண்டர்களும் தேவர்களும் கூடி இருந்து சிவசிவ போற்றி போற்றி என்று வழிபடுகின்றார்கள்; விளங்குகின்ற ஞான உருவை எனக்களித்த அருட்பெருஞ் சோதியாகிய என் குருவே! பள்ளியினின்றும் எழுந்தருள்க. எ.று.

     ஞாயிற்றொளி மறைந்த பொழுது நிலவுலகம் இருளில் மறைந்து தெளிவற்று விடுதலால் விடியும்போது தெளிய விளங்குதல் பற்றி, “நிலம் தெளிந்தது” என்று சொல்லுகின்றார். கணம் - இருள் கூட்டம். சுவணம் - பொன்; ஈண்டுச் சூரியனுக்கு ஆயிற்று. ஊர் தோறும் திருக்கோயில்களில் விடியற்காலையில் சங்கு முழங்குவது பண்டை நாளைய மரபாதலால், “கோடு ஒலிக்கின்ற” என்று கூறுகின்றார். கோடு - சங்கு. ஒலிக்கின்ற என்பது அன்சாரியைத் தொக்க அகவினை நிகழ்காலப் பன்மை வினைமுற்று. சூரியோதயத்தில் தாமரைகள் மலர்வது இயல்பாதலால், “அலர்ந்தது தாமரை” என்று அறிவிக்கின்றார். இருள் போனதையும் இரவு அகன்றதையும் எடுத்துக் கூறியது உயிர்களின் உள்ளத்தில் படிந்திருக்கும் ஆணவ இருள் அகற்சியையும் மாயா கன்மை ஒழிவையும் குறித்தற்காதலால், “ஆணவ இருள் போய் அழிந்தது கழிந்தது; மாயை மால் இரவு புலர்ந்தது” என்று புகல்கின்றார். அழிந்தது - முற்றெச்சம். இலங்குரும் - திருவருள் ஞான ஒளி திகழ்கின்ற. திருமேனி - ஞானவான்களின் திருமேனி. திருவருளால் பொன் ஒளி திகழ்வது பற்றி, “இலங்குரு” என்று பராவுகின்றார். ஞான குருபரனால் உண்டாகும் இந்த நலம் அருட்பெருஞ்சோதியில் உண்டாகியது எனத் தெரிவிப்பதற்கு, “என் அருட்பெருஞ்சோதி என் குருவே” என்று விளம்புகின்றார்.  

     (3)