4888. கல்லாய மனங்களும் கரையப்பொன் ஒளிதான்
கண்டது கங்குலும் விண்டது தொண்டர்
பல்லாரும் எய்தினர் பாடிநின் றாடிப்
பரவுகின் றார்அன்பு விரவுகின் றாராய்
நல்லார்மெய்ஞ் ஞானிகள் யோகிகள் பிறரும்
நண்ணினர் சூழ்ந்தனர் புண்ணிய நிதியே
எல்லாஞ்செய் வல்லஎன் அருட்பெருஞ் சோதி
என்தெய்வ மேபள்ளி எழுந்தருள் வாயே.
உரை: கற் போன்ற மனமுடையவர்களும் கரைந்துருகச் சூரியனது ஒளி பரந்துவிட்டது; இரவு நீங்கிற்று. தொண்டர்கள் பலரும் திருமுன் வந்து நின்று பாடியும் ஆடியும் துதிக்கின்றார்கள்; உள்ளத்தில் அன்பு கொள்ளுகின்றார்கள்; நல்லவர்களாகிய உண்மை ஞானிகளும் யோகியர்களும் மற்ற உலகினரும் திருமுன் வந்து சூழ்ந்து நின்று துதிக்கின்றார்கள்; புண்ணியச் செல்வமே! எல்லாம் செயல் வல்ல அருட் பெருஞ் சோதியாகிய என் தெய்வமே! பள்ளியினின்றும் எழுந்தருளுக. எ.று.
பகற் பொழுதில் உயிர்களின் நிலை கண்டு கற் போன்ற மனமுடையவரும் கரைந்துருகுவது இயல்பாதலால், “கல்லாய மனங்களும் கரை” என்று கூறுகின்றார். விண்டது - நீங்கிற்று. சரியை கிரியையாகிய ஒழுக்கத்தைப் பூண்ட நன்மக்களைத் “தொண்டர்” என்று குறிக்கின்றார். நன்ஞானமும் நல்லொழுக்கமும் நல்விரதங்களும் உடையவராதலின், “நல்லார் மெய்ஞ்ஞானிகள் யோகிகள் பிறரும்” என்று உரைக்கின்றார். நண்ணினர் - சூழ்ந்தனர். நண்ணினர் - முற்றெச்சம். சூழ்ந்தனர் - நினைந்து துதிக்கின்றனர். (4)
|