4891. சினைப்பள்ளித் தாமங்கள் கொணர்ந்தனர் அடியார்
சிவசிவ போற்றிஎன் றுவகைகொள் கின்றார்
நினைப்பள்ளி உண்ணத்தெள் ஆரமு தளிக்கும்
நேரம்இந் நேரம்என் றாரியர் புகன்றார்
முனைப்பள்ளி பயிற்றாதென் தனைக்கல்வி பயிற்றி
முழுதுணர் வித்துடல் பழுதெலாம் தவிர்த்தே
எனைப்பள்ளி எழுப்பிய அருட்பெருஞ் சோதி
என்னப்ப னேபள்ளி எழுந்தருள் வாயே.
உரை: பூசைக்குரிய பூமாலைகளைக் கொண்டுவந்து அடியவர்கள் நின்னைச் சிவசிவ என்று போற்றி மனத்தால் நினைந்து வாயால் ஓதி மகிழ்கின்றார்கள்; நினைப்பு என்னும் வாயால் எடுத்து உண்ணுமாறு திருவருள் ஞானமாகிய அரிய அமுதத்தை வழங்கும் நேரம் இந்த நேரம் என்று உயர்ந்தோர் உரைக்கின்றார்கள்; என்னுள் தன்முனைப்பென்னும் தீமை பயிலாதவாறு என்னை அருட் கல்வி பயில்வித்து உணரத்தக்கவ முழுதும் உணரும்படிச் செய்து உடலிடத்தே உள்ள குற்றம் எல்லாம் போக்கி என்னை வீணுறக்கத்தில் இருந்து எழுப்பிய அருட் பெருஞ் சோதியாகிய என்னுடைய தந்தையே! பள்ளியினின்றும் எழுந்தருளுக. எ.று.
பள்ளித் தாமங்கள் - பூமாலைகள்; பூக்களால் தொடுக்கப்பட்ட மாலைகள் பூமாலைகள் எனப்படும். செடி கொடி முதலியவற்றிற்குச் சினைகளாதலால் அவற்றால் தொடுக்கப்பட்ட மலர் மாலைகள், “சினைப்பள்ளித் தாமங்கள்” எனப்படுகின்றன. அடியார் - சிவனுடைய திருவடியை வழிபடுபவர். திருவருள் ஞானம் அருள் பொருளாதலால், “ஆரமுதம்” என்று சிறப்பிக்கின்றார். உண்ணப்படும் பொருளாதலின் திருவருள் ஞானத்தை, “ஆரமுது” என்று உருவகம் செய்கின்றார். ஆரியன் - உயர்ந்தோன். முனைப்பு தற்போதம் எனவும் வழங்கும். யான் எனது என்னும் செருக்கும் இதுவேயாகும். தன் முனைப்பாகிய பள்ளியில் கிடத்திக் கெடச் செய்யாது ஆண்டமை விளங்க, “முனைப்பள்ளி பயிற்றாது” என்றும், ஞானமும் வாய்மையும் பெறுவிக்கும் அருட் கல்வியின் சிறப்புப் புலப்பட, “கல்வி பயிற்றி” என்றும் கூறுகின்றார். திருவருளாலன்றிப் பசுபாச ஞானங்களை உடையவர்க்கு முற்ற உணர்தல் இயலாதாகலின், அருட்பெருஞ் சோதி தனக்கு முற்ற உணரும் அருள் ஞானத்தை நல்கிற்று என்பாராய், “முழுது உணர்வித்து” என்றும், உடல் உழைப்பின் விளைவாகும் நோயும் உறக்கமும் போக்கினமை புலப்பட, “உடல் பழுதெல்லாம் தவிர்த்து” என்றும் பகர்கின்றார். (7)
|