4894. அலங்கரிக் கின்றோம்ஓர் திருச்சபை அதிலே
அமர்ந்தருட் சோதிகொண் டடிச்சிறி யோமை
வலம்பெறும் இறவாத வாழ்வில்வைத் திடவே
வாழ்த்துகின் றோம்முன்னர் வணங்கிநிற் கின்றோம்
விலங்கிய திருள்எலாம் விடிந்தது பொழுது
விரைந்தெமக் கருளுதல் வேண்டும்இத் தருணம்
இலங்குநல் தருணம்எம் அருட்பெருஞ் சோதி
எம்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே.
உரை: அருட் சோதியாகிய எம்முடைய தந்தையே! நீ எழுந்தருளுதற் கென ஓர் அழகிய சபையை அமைத்து அதனை அழகிய பொருட்களால் அலங்காரம் செய்துள்ளோம்; அதன்கண் எழுந்தருளி உனது அருள் ஞான ஒளியைக் கொண்டு மிக்க சிறுமை உடையவர்களாகிய எம்மை நலம் மிக்க இறவாத வாழ்வில் வைத்திட வேண்டி உன்னுடைய திருமுன்பு நின்று வணங்கி வாழ்த்துகின்றோம்; எம்மைப் பற்றி இருந்த மலமாயை செய்யும் இருளெல்லாம் நீங்கி விட்டன; ஞானச் சூரியன் உதிக்கும் விடியற் காலையும் வந்து விட்டது; எமக்கு உமது அருளை நல்குதல் வேண்டும்; அதற்கு இந்த நேரமே விளக்கம் தரும் நந்நேரமாகும்; அருட்பெருஞ் சோதியாகிய என்னுடைய தந்தையே! பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக. எ.று.
வடலூர் ஞான சபையின்கண் எழுந்தருளும் சிவ பரம்பொருளை நினைந்து இதனை ஓதுகின்றார் என்பது குறிப்பாய் விளங்குகின்றது. சிற்சபை என்றும் பொற்சபை என்றும் விதந்தோதாது திருச்சபை என்பது ஈண்டுக் குறிக்கத் தக்கது. பிறப்பிறப் பில்லாத இன்பப் பெரு வாழ்வு தமக்கு எய்துதல் வேண்டும் என்பதற்காக, “அடிச் சிறியோமை வலம் பெறும் இறவாத வாழ்வில் வைத்திடவே வாழ்த்துகின்றோம்” என எடுத்து மொழிகின்றார். மலமாயை விளைவிக்கும் அஞ்ஞான இருள் ஒழிந்தமை உணர்தற்கு, “விலங்கியது இருளெலாம்” என்று விளம்புகின்றார். (10)
|