பக்கம் எண் :

4899.

     ஞானம் உதித்தது நாதம் ஒலித்தது
     தீனந் தவிர்ந்ததென்று உந்தீபற
          சிற்சபை கண்டேன்என்று உந்தீபற.

உரை:

     திருவடிக் காட்சி இன்பத்தால் திருவருள் ஞானம் தமக்கு விளக்கமானதும் திருக்கோயில் சின்னங்களும் சங்குகளும் முழங்கினமையால் நாத தத்துவத்தை உணர்வில் காணச் செய்ததும் விளங்க, “ஞானம் உதித்தது நாதம் ஒலித்தது” என்று நவில்கின்றார். இவை இரண்டையும் பெறாக் காலத்தில் தமது உள்ளத்தில் நிலவிய குறைபாடு பெற்றவிடத்து நீங்கினமை பற்றி, “தீனம் தவிர்ந்தது” என்று தெரிவிக்கின்றார். இதனால் தமது அறிவுக் கண் திறந்தமை விளங்க, “சிற்சபை கண்டேன்” என்று செப்புகின்றார்.இவ்வைந்து பாட்டுக்களாலும் விடியற் காலத்தில் தமக்குத் திருவருள் இன்ப விழைவு தோன்றியதும், அவ்விழைவு மிகுதியால் மனக்கண்ணில் இறைவன் திருவடித் தோற்றம் அளித்ததும், அவற்றைப் பரவி வாழ்த்தி மகிழ்ந்ததும், அம்மகிழ்ச்சி தந்த இன்பத்தால் தமக்குச் சிவஞானம் உதித்ததும், பெறாக் குறைபாடு நீங்கியதும் எடுத்துரைத்தவர், பின்னர்ச் சிவஞான நிலையமாகிய சிற்சபையின் தரிசனப் பேற்றைப் பெற்றதனால், சிற்சபை கண்டேன் என்று தெரிவிக்கின்றார்.

     (5)