4908. ஆனந்த நாடகம் ஆடுதல் சார்ந்தது
அடுத்த தருணம் இதுவாக நேர்ந்தது
ஈனந்த மாயை இருள்வினை சோர்ந்தது
என்னருட் சோதிஎன் உள்ளத்தில் ஆர்ந்தது அற்புதம்
உரை: இறைவன் ஞான சபையில் திருநடனம் புரிதற்கு ஏதுவாவது திருவருளாதலால், “ஆனந்த நாடகம் ஆடுதல் சார்ந்தது” என்று கூறுகின்றார். ஈன் - இவ்வுலகு. மாயையும் மலவிருளும் இரு வினைகளும் திருவருளால் பிணிப்பு நீங்கி வீழ்ந்தன என்பதை விளக்க, “அந்த மாயை இருள்வினை சோர்ந்தது” என்று சொல்லுகின்றார். அருட்பெருஞ் சோதி என் உள்ளத்தில் நிறைந்தது என்பாராய், “என் அருட்சோதி என் உள்ளத்தில் ஆர்ந்தது” என்று பாடுகின்றார். (4)
|