பக்கம் எண் :

4909.

     சத்திய ஞான சபைஎன்னுள் கண்டனன்
          சன்மார்க்க சித்தியை நான்பெற்றுக் கொண்டனன்
     நித்திய ஞான நிறையமு துண்டனன்
          நிந்தை உலகியற் சந்தையை விண்டனன்.     அற்புதம்

உரை:

     சத்திய ஞான சபை - உண்மை ஞானிகள் கூடியிருக்கும் ஞான சபை. சன்மார்க்க சித்தி - சன்மார்க்க ஞானத்தால் விளையும் ஞானப் பயன். அழியாத ஞானமாகிய நிறைந்த அமுதத்தைப் பெற்றேன்; அதனால் கீழ்மைப்பட்ட உலகியல் ஆரவாரத்தை நீங்கினேன் என்பாராய், “நித்திய ஞான நிறை அமுது உண்டனன்; நிந்தை உலகியற் சிந்தையை விண்டனன்” என்று கூறுகின்றார். நிந்தை - கீழ்மை. சந்தை - ஆரவாரம். விண்டனன் - நீங்கினேன்.

     (5)