பக்கம் எண் :

494.

    மந்தா ரஞ்சேர் பைம்பொழி லின்கண் மயிலேறி
    வந்தா ரந்தோ கண்டன னங்கை வளைகாணேன்
    சந்தா ரஞ்சூழ் தண்கிளர் சாரற் றணிகேசர்
    தந்தா ரென்பால் தந்தா ரென்னைத் தந்தாரே.

உரை:

     சீர் மிக்க குவளைப் பூமாலை விளங்கும் தோள்களை யுடைய வரும், சிவனுக்குப் பேர் பெற்ற மகனாரும், கருமுகில் தவழும் தணிகையில் எழுந்தருளும் பெருமானாருமாகிய முருகப் பெருமான் அழகிய மயிலூர்தி மேல் இப்பேரூரிலுள்ள திருவீதியில் வந்தாராக, அவரைக் கண்ட கச்சணிந்த கொங்கைகளையுடைய இளமகளிருள் யாவர் தாம் காதல் மயக்கம் எய்தார், கேள், எ. று.

     தணிகை மலைச் சுனையில் முப்பொழுதும் பூப்பன வெனப் புராணம் புகழும் குவளைப் பூமாலையைச் “சீர்வளர் குவளைத்தார்” எனவும், அது தானும் அகன்ற மார்பின்கண் கிடந்து விளங்கியவாறு தோளில் அணிந்த அழகு புலப்படத் “தார்வளர் புயனார்” எனவும், அவர் யாவரெனின் சிவன் பெற்ற புதல்வர் என்றற்குச் “சிவனார் தம் பேர்வளர் மகனார்” எனவும் கூறுகின்றார். சிவ சண்முகன், சிவகுகன், சிவகுமரன் எனச் சிவன் பெரயரொடு கூட்டிச் சிறப்பிக்கப்படும் நலம் கண்டு, “சிவனார் தம் பேர்வளர் மகனார்” என்று ஏத்துகின்றார். பெருந்திணை நங்கை யொருத்தி முருகன் தணிகை வீதியில் மயில் மேல் உலா வரக் கண்டு காதல் மயக்கமுற்றது கண்டு வினவிய செவிலிக்கு விடை கூறும் துறையில் இப்பாட்டும் பிறவும் அமைந்திருத்தலால், இனி, அவள் கூற்றாகவே உரை காண்கின்றாம். முருகப் பெருமான் எவ்வூரில் எங்கே உலா வந்தார் என்று கேட்ட செவிலிக்கு அவர் திருத்தணிகைப் பதியின் தலைவராதலால், அப் பதியில் மாட வீதியில் மயில் மேல் இவர்ந்து உலா வந்தார் என்பாராய்த் “தணிகைப் பெருமானார் ஏர்வளர் மயில் மேல் ஊர்வளர் நியமத்திடை வந்தார்” என உரைக்கின்றார். இயற்கையிலே அவர் பேரழகுடையவராயினும், மயிலினது அழகால் அது மிகவும் ஏற்றம் பெற்ற தென்பாள், “ஏர்வளர் மயில்” எனச் சிறப்பிக்கின்றார். தணிகையூரவர் உலாவரும் வீதி யென்பது கருதித் தூய நிலையில் வைத்துப் பேணுகின்றமை விளங்க, “ஊர்வளர் நியமம்” என வுரைக்கின்றார். செல்வர்களின் மாடங்கள் மலிந்த பெரு வீதியைச் சங்கச் சான்றோர், “திருவீற்றிருந்த தீதுதீர் நியமம்” (முருகு) என்று சிறப்பிப்பர். முருகப் பெருமான் திருவுலா வந்தாராயின், அவரைக் கண்டவர் பலர் இருக்க நீ மயக்க மெய்து வானேன் என்று மேலும் வினாவிய செவிலிக்கு, அம்ம, நான் மாத்திரமன்று, மயக்க முற்றவர் பலர் என்பாளாய், “வார்வளர் முலையார் ஆர் வளர் கில்லார் மயல் அம்மா” என விடை யிறுக்கின்றாள். வார் - மகளிர் மார்பிற் கணியும் கச்சு. கொங்கை பருத்து வளரும் இளமகளிர்க்கு இன்றியமையாமை கருதிப் பன்னூ றாண்டுகட்கு முன்பே தமிழ் மகளிர் அணிந்திருந்த இதனைப் பழங்கால ஓவியங்களிலும் உருவச் சிலைகளிலும் பரக்கக் காணலாம். இடைக் காலத்தே விடுபட்டிருந்து இந்நாளில் மறுபடியும் வழக்கிற்கு வந்து விட்டது; எனினும், இதன் பெயர் மார்க்கச்சு எனப்படாமல், ஆங்கில மொழியால் பிரேசரி எனவும், பிரா எனவும் வழவங்குகின்றது.

     இதனால், தணிகை முருகன் உலா வரக் கண்ட பெருந்திணை நங்கை மயல் கொண்ட திறம் கூறியவாறாம்.

     (2)