495. நதியும் மதியும் பொதியும் சடையார் நவின்மாலும்
விதியும் துதியைம் முகனார் மகனார் மிகுசீரும்
நிதியும் பதியும் கதியும் தருவார் நெடுவேலார்
வதியும் மயில்மேல் வருவார் மலரே வருமாறே.
உரை: தோழி, மந்தார மரங்கள் செறிந்துள்ள சோலையில் மயில் மேல் ஏறி வந்த முருகப் பெருமானைக் கண்டு கைவளையை இழந்த நான், சந்தன மரம் சூழ்ந்த தணிகைமலைப் பதியின்கண் மறுபடியும் வந்து தமது மார்பின் மாலையை எனக்குத் தந்து என்னையும் எனக்கே தந்தருளினார், யானும் உய்ந்தேன், எ. று.
கற்பக நாட்டு மந்தாரச் சோலையில் தெய்வயானையார் திருமணத்தின் போது சூரவன்மாவாகிய மயில் மேல் இவர்ந்து திருவுலா வந்த நிகழ்ச்சியை, “மந்தா ரஞ்சேர் பைம்பொழி லின்கண் மயிலேறி வந்தார்” என நினைக்கின்றாள். தெய்வயானையார் உடனிருப்பது காணப் பொறாது உள்ளம் சோர்ந்து உடம்பு சுருங்கிக் கைவளை கழன்று வீழ வருந்தினாளாகலின், அத் தெய்வயானையாரைக் குறிக்காமல், உற்ற துரைக்கலுற்று, “அந்தோ, கண்டனன் அங்கை வளை காணேன்” என வுரைக்கின்றாள். மந்தாரம், தெய்வ வுலகத்து மரங்களில் ஒன்று என்பர்; கற்பகமர வகையில் ஒன்று என்பதும் உண்டு. மந்தாரப் பொழில் கற்பகச் சோலையின் வேறு என அமுத கவிராயரின் ஒருதுறைக் கோவையிற் காணலாம். சந்தாரம் - சந்தன மரம். சந்து ஆரம் என்ற இரு சொற்களுமே சந்தனத்தைக் குறிப்பன என அறிக. தண்கிளர் சாரல் - தட்பம் பொருந்திய சாரல். சாரல் - மலைப்பக்கம். தணிகை ஈசர், தணிசேகர் என வந்தது. தார் - மார்பில் அணியும் மாலை. தந்தார் என்பால் தந்தார் - தமது தாரை என்னிடம் தந்தார். மார்பிற் கிடந்தசையும் தாரைக் கண்டு, அம்மார்பைத் தான் முயங்கி யின்புறுவதெப்போ தென ஏங்கி நினைவு செயல்களைத் துறந்து கிடந்த எனக்கு அந்தத் தாரைப் பெற்றது அவரையே பெற்றது போன்ற உணர்வு பிறத்தலும், எனக்குரிய உணர்வு செயல்கள் உளவாயின என்பாளாய்த் “தணிகேசர் தம் தார் என்பால் தந்தார் என்னைத் தந்தார்” என உரைக்கின்றாள். தன்னைக் கண்டாரைத் தன் வயமாக்கித் தானாக்கிக் கொள்வது தற்பரனாகிய முதல்வன் இயல்பாதலால், தன்னைக் கண்ட யான் என் வயம் இழந்தேன் என்றும், அவன் தந்த மாலை மயக்கத்தால் மீளவும் மானிட மகளாயினேன் என்றும் பொருள் கொள்ளுமாறு, “என்பால் தார் தந்தார் தந்தார் என்னைத் தந்தார்” என்பது நோக்கத் தக்கது. “தன்னைக் கண்ட என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணமாகிய ஈசன்” (பொன்வண்) எனச் சேரமான் பெருமாளும், “தந்ததுன் றன்னைக் கொண்டது என்றன்னைம (கோயில்) எனத் திருவாதவூரரும், “சேர்வார் தாமே தானாகச் செயுமவன்” (கழுமல) எனத் திருஞானசம்பந்தரும் தெரிவிப்பது காண்க.
இதனால், தார் தரப் பெற்ற நங்கை கொண்ட இன்பநிலை எடுத்தோதியவாறாம். (3)
|