பக்கம் எண் :

கண

கண்ணிகள்

4952.

     வாழிஎன் தோழிஎன் வார்த்தைகேள் என்றும்
          மரணமில் லாவரம் நான்பெற்றுக் கொண்டேன்
     சூழியற் செஞ்சுடர் தோற்றுறு கீழ்பால்
          தூய்த்திசை நோக்கினேன் சீர்த்திகழ் சித்தி
     ஊழிதோ றூழிநின் றாடுவன் நீயும்
          உன்னுதி யேல்இங்கே மன்னரு ளாணை
     ஆழி கரத்தணித் தாடேடி பந்து
          அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து.     ஆடேடி

உரை:

     சாகா வரம் பெற்று மகிழ்கின்ற நிலையை, “மரணமில்லா வரம் நான் பெற்றுக் கொண்டேன்” என்று சொல்லுகின்றாள். சூழியல் செஞ்சுடர் - மேரு மலையை வலமாகச் சூழ்ந்து வரும் இயல்புடைய சிவந்த சூரியன். கீழ்பால் தூய்த் திசை - கிழக்காகிய தூய திசை. சீர்த்திகழ் சித்தி - சிறப்பு மிக்க கன்ம யோக ஞான சித்திகள். ஊழிதோறு ஊழி நின்று ஆடுவன் - ஊழிக் காலம் நிலைபெற நின்று ஆடுவேன். மன்னருளாணை - மன்னனாகிய சிவபெருமானுடைய அருளாணையாகச் சொல்லுகிறேன். உன்னுதியேல் - விரும்புவாயானால். ஆழி கரத்தணிந்து - மோதிரத்தைக் கைவிரலில் அணிந்து கொண்டு. அருட்பெருஞ்சோதி ஆண்டவனை மனக்கண்ணில் கொண்டு பந்தாடுவாயாக. நினைத்தல் என்னும் பொருளில் வரும் உன்னுதல் என்னும் சொல் ஈண்டு விரும்புதல் என்னும் பொருளில் வந்தது.

     (2)