பக்கம் எண் :

4953.

     இசையாமல் போனவர் எல்லாரும் நாண
          இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன்
     வசையாதும் இல்லாத மேற்றிசை நோக்கி
          வந்தேன்என் தோழிநீ வாழிகாண் வேறு
     நசையாதே என்னுடைய நண்பது வேண்டில்
          நன்மார்க்க மாம்சுத்த சன்மார்க்கம் தன்னில்
     அசையாமல் நின்றங்கே ஆடேடி பந்து
          அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து.     ஆடேடி

உரை:

     நம்மோடு பந்தாடுதற்கு உடன் படாமல் நமது சுத்த சன்மார்க்கத்தினின்றும் நீங்கிச் சென்றவர்கள் கண்டு வெட்கும்படியாக நான் மரணமில்லாத பெருவரமாகிய வாழ்வைப் பெற்றுக் கொண்டேன் என்பாளாய், “இசையாமல் போனவர் எல்லாரும் நாண இறவாப் பெருவரம் யான் பெற்றுக் கொண்டேன்” என்று சொல்லுகின்றாள். வசை யாதும் இல்லாத மேற்றிசை - குற்றம் சிறிதும் இல்லாத மேற்கு திசை. வேறு நசையாது - வேறு எதனையும் விரும்பாமல். நண்பு - நட்பு. சுத்த சன்மார்க்கமாகிய நன்மார்க்கத்தில் நிலை பெற நின்று அருட்சோதி ஆண்டவனை ஞானத்தால் கண்டு மகிழ்வுற்றுப் பந்தாடுக என்பாளாய், “நன்மார்க்கமாம் சுத்த சன்மார்க்கம் தன்னில் அசையாமல் நின்று அங்கே ஆடேடி பந்து” என உரைக்கின்றாள்.

     (3)