4956. தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார்
தாமுளம் நாணநான் சாதலைத் தவிர்த்தே
எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன்
என்தோழி வாழிநீ என்னொடு கூடி
துப்பாலே விளங்கிய சுத்தசன் மார்க்கச்
சோதிஎன் றோதிய வீதியை விட்டே
அப்பாலே போகாமல் ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
உரை: இவ்வுலகத்தவர் தவறான உணர்வினால் சாகும் நெறியையே எண்ணிக்கொண்டு இருக்கின்றனர் என்பாளாய், “தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார்” என்று உரைக்கின்றாள். சாதலைத் தவிர்த்து - சாகும் நிலையைப் போக்கி. துப்பாலே விளங்கிய சுத்த சன்மார்க்கச் சோதி - மெய்ம்மையால் விளக்கமுற்ற சுத்த சன்மார்க்கத்தில் விளங்குகின்ற அருட்சோதி. சுத்த சன்மார்க்க நெறியைக் கைவிடாமல் போற்றுக என்பாளாய், “சோதி என்றோதிய வீதியை விட்டே அப்பாலே போகாமல் ஆடேடி பந்து” என்று பாடுகின்றாள். (6)
|