4957. வெங்கேத மரணத்தை விடுவித்து விட்டேன்
விச்சைஎ லாம்கற்றென் இச்சையின் வண்ணம்
எங்கேயும் ஆடுதற் கெய்தினேன் தோழி
என்மொழி சத்தியம் என்னோடும் கூடி
இங்கே களிப்பது நன்றிந்த உலகோ
ஏதக் குழியில் இழுக்கும் அதனால்
அங்கேபா ராதேநீ ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
உரை: தோழி, வெவ்விய துன்பத்தைத் தருகின்ற மரணாவத்தையைப் போக்கி விட்டேன்; வேறுவகையாக ஓதுகின்ற வித்தைகள் அனைத்தையும் கற்று ஒரு பயனும் இல்லை; என் விருப்பப்படி எவ்விடத்தும் இலங்கக் கூடிய நிலையை எய்தினேன்; என்னுடைய தோழி, என்னுடைய சொல் உண்மையாகும்; என் சொல்லை நம்பி என்னோடு கூடியிருந்து இங்கே களித்து மகிழ்வது நல்லது; இந்த உலகமோ துன்பக் குழிக்கு உன்னை இழுத்துச் செல்லுமாதலால் அவ் வுலகத்தை நினையாமல் நீ பந்தாடுக; அருட் பெருஞ் சோதியாகிய ஒளிப் பொருளைக் கண்டு உவந்து பந்தாடுவாயாக. எ.று.
மரணம் எய்தும் போது நோயும் துன்பமும் தோன்றி வருத்துவதால், “வெங்கேத மரணம்” என்று கூறுகின்றாள். மரணத்தைக் கேதம் என்பது வழக்கு. சாகாக் கலையை விடுத்துப் பிற கலைகளைக் கற்பது பயனில்லை என்பாளாய், “விச்சையெலாம் கற்றென்” என்று கூறுகின்றாள். எல்லா வித்தைகளையும் கற்றும் நான் என் விருப்பத்தின் படியே எங்கும் விளக்கமுறுதற்கு விளக்கமுறுவேனாயினேன் என்று உரைப்பினும் அமையும். தான் கூறுவதன் உண்மையை வற்புறுத்தற்கு, “என் மொழி சத்தியம்” என இயம்புகின்றார். இங்கே என்பது சமரச சன்மார்க்கம். உலகியல் வாழ்வைப் பழிக்கின்றாளாதலால், “இந்த உலகோ ஏதக் குழியில் இழுக்கும்” என மொழிகின்றாள். ஏதக் குழி - துன்பம் நிறைந்த குழி. பார்த்தவிடத்து நீ அதன்கண் இழுக்கப்படுவாய் என எச்சரிப்பாளாய், “அங்கே பாராதே நீ ஆடேடி பந்து” என்று உரைக்கின்றாள். (7)
|