497. தந்தே நயமாம் மாதவர் புகழும் தணிகேசர்
சந்தே னொழிவாய் அந்தேன் மொழியாய் தனியின்று
வந்தே னினிமேல் வாரே னென்றார் மனமாழ்கி
நொந்தேன் முலைமீ தவ்வுரை யென்றார் நுவலென்னே.
உரை: தோழி, பெரிய தவமுடைய நன்மக்கள் அன்பு மிக்குப் புகழும் தணிகைத் தலைவராகிய முருகப் பெருமான், இவண் போந்து, 'அழகிய தேன் போலும் சொற்களைப் பேசுபவளே! எனக்குத் தூது விடுவது ஏன? இனி அது வேண்டா; இப்பொழுது யான் தனியாக வந்துள்ளேன்; இனிமேல் வாரேன்' என்று சொன்னார்; யான் அது கேட்டு மனம் பேதுற்று வருந்தினேன்; என் மனநோயைக் கண்டு யான் வாரேன் என்ற சொல் உன் கொங்கையை யன்றோ குறிக்கிறது என்று மேலும் சொன்னார்; அவர் கருத் தென்னை? கூறுக, எ. று.
மாதவர் நயம் தந்து புகழும் தணிகை, பெரிய தவத்தோர் அன்பு தந்து புகழும் தணிகை என்க. நயம் - விருப்பம்; ஈண்டு விருப்பத்துக் கேதுவாகிய அன்பு குறித்தது. அருளியல் நெறியில் (Mystic Field) இயங்கும் வள்ளற் பெருமான் திருவுள்ளம் தூய அருளியற் பெருமக்களை (Philosophic Mystics) மறவாமையின், அவர்களை முந்துற எடுத்துத் “தந்தே நயமாம் மாதவர் புகழும் தணிகேசர்” எனப் புகல்கின்றார். சண்முகர் கொம்பியின் தொடக்கத்தும், “குறவர் குடிசை நுழைந்தாண்டி - அந்தக் கோமாட்டி எச்சில் விழைந்தாண்டி” என்றவர், அருளியல் மாதவர் நினைவு அகலாமையின், “துறவர் வணங்கும் புகழாண்டி - அவன் தோற்றத்தைப் பாடி யடியுங்கடி” என்று பாடுவது இங்கே ஒப்பு நோக்கற் பாலதாம். சந்து - தூது. தோழி முதலாயினாரை முருகன்பால் தூது விட நினைந்தாளாதலின், 'அந்நினைவு வேண்டா; நினைந்த மாத்திரத்தே நினைந்த உருவில் வருவேன்' என்பாராய்ச் “சந்து ஏன் ஒழிவாய்” என்றும், சந்து விட நினைந்தேன் என்று காதலன்பு கனிந்துரைத்தது தேனினும் இனிதாயிருந்தது என்பார், “அந்தேன் மொழியாய்” என்றும் உரைக்கின்றார். கருதுவார் கருத்தறிந்து முடிப்பவனாதலால், பிறர் அறியாவாறு தனியாக வந்தேன் என்பான். “தனி யின்று வந்தேன்” எனவும், இவ்வாறு இனி நாளும் வரமாட்டேன் என்பான் போல, “இனிமேல் வாரேன்” எனவும் கூறினான். “மனத்துள் நின்ற கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னை” (ஆலவாய்) என நாவுக்கரசர் உரைப்பது காண்க. தனியாக வந்தது கேட்டு மனம் மிக மகிழ்ந்தவட்கு, “இனிமேல் வாரேன்” என்றது ஆற்ற முடியாத கலக்கத்தையும் வருத்தத்தையும் உண்டு பண்ணிப் பெரிய மன மயக்கத்தைத் தோற்று வித்தமையால், “மன மாழ்கி நொந்தேன்” என்கிறாள். இங்கிதம் அறியா நங்கையாதலின், முருகன் “வாரேன்” என்ற சொல்லிலுள்ள இங்கிதம் புலனாகவில்லை; “இனி நாம் இனிது கூடலாம்; தடை செய்வது உன் மார்க்கச்சு; அதனை நீக்குக” என்பது இங்கிதப் பொருள். வார் - மார்பிலணியும் கச்சு. இப்பாட்டின்கண், முருகன் கூறினா னென்பன, கூற்றவன் இன்மையின் யாப்புற வந்த கொண்டெடுத்து மொழிதல். தோழி இங்கிதப் பொருள் நுவலவும் நங்கை ஏமாந்தமை எண்ணி இரங்கியது பயன். நுவல் வென்னே என்பது பாடமாயின், “முலை மீதவ்வுரை” யென்றார்; பொருளறிந் திசைந்தேன்; வேறே சொல்லுதற்கு என்னை யுளது என்றதாம். இதனாற் பயன் கலவி மகிழ்தல்.
இதனால், பெருந்திணை நங்கை இங்கிதப் பொருளறியாது ஏமாந்தயர்ந்தமை கூறியவாறாம். (5)
|