498. தண்டணி காந்தளொர் சண்பக மலரின் தளர்வெய்தத்
தெண்டணி நீலமொர் செங்குவ ளையினில் திகழ்வேன்பால்
வண்டணி கேசரும் வந்தருள் வாரோ வாராரோ
தொண்டணி வீரொரு சோதிட மேனும் சொல்லீரே.
உரை: திரண்ட காம்பினால் அழகுற்ற காந்தள் மலர் போன்ற கைகள் சண்பகப் பூப்போல விரல் மடங்கிக் கொள்ளச் சோர்வுற்று அழகிய தண்டிற் பூக்கும் நீல மலர் போன்ற கண்கள் செங்குவளை போலச் சிவந்துள்ள என்பால், வளவிய தணிகைமலைத் தலைவரான முருகப் பெருமான் வந்து அருள்புரிவாரா? வாரா தொழிவாரா? அப்பெருமானுடைய தொண்டர்களே, ஒரு சோதிடம் கூறுவீர்களா? சொல்லுமின், எ. று.
கையை மேனோக்கி விரித்து நிறுத்தியது போல மலர்வது பற்றிக் காந்தளை மகளிர் கைக்கு உவமம் செய்வது புலவர் மரபு. வெண்மையும் செம்மையும் கலந்த வண்ணத்துடன் அழகுறத் திரண்ட காம்பினால் தாங்கப்பட்டிருக்கும் இக் காந்தட்பூவைக் காந்தப்பூ என மலைநாட்டவர் வழங்குகின்றார். காந்தள் போல் இனிது விரிந்து தோன்றும் கை, உள்ளத்தே வருத்தம் உறும் போது விரல் மடங்கிக் குவிந்து சண்பகப் பூப்போலப் புலமைக் கண்ணுக்குக் காட்சி தருவதால், மனத் தளர்வுற்று வருந்தும் நங்கை, “தண்டணி காந்தள் ஓர் சண்பக மலரின் தளர்வுற்று” என்றும், அழகிய தண்டின் மேற் பூக்கும் நீல மலர் போன்ற கண்கள் அழுது செங்குவளை மலர் போற் சிவந்துள்ளேன் என்பாளாய்த் “தெண்டணி நீலமொர் செங்குவளையினில் திகழ்வேன்” என்றும் இயம்புகின்றாள். தெண்டு - தண்டு. வன்மையுடைய தென்றற்குத் தணிகை, “வண்டணிகை” எனப்படுகிறது. முருகனுக்கு நாளும் செய்யும் தொண்டினால் மேம்படும் நல்லோர்களைத் “தொண்டணிவீர்” என்று அழைக்கின்றாள். தமக்கு இனியவராய்ப் பிரிந்து சென்றவர் வருவாரா? வரமாட்டாரா? எனக்கேட்பது, “சோதிடம் கேட்டது” என இன்றும் வழங்கி வருகிறது.
இதனால் பெருந்திணை நங்கை முருகன் வாராமை நினைந்து ஆற்றாளாய்ச் சோதிடம் கேட்டவாறாம். (6)
|