503. மன்றேர் தணிகையி னின்றீர் கதிதர வந்தீரோ
என்றே னசைதரு மின்றேன் மொழியாய் யானுன்பால்
இன்றே சுரருல கெய்திட வந்தே னென்றார்காண்
குன்றேர் முலையாய் என்னடி யவர்சொற் குறிதானே.
உரை: மன்றங்களால் அழகுறுகின்ற தணிகைப் பதியினின்று எமக்குக் கதி தரவே வந்தீர்கள் போலும் என யான் விளம்பினேனாக, அன்பு தருகின்ற இன்பத் தேன் போன்ற சொற்களை யுடையவனே, யான் இப்பொழுதே உன்பால் சுரருலக மெய்துதற்கே வந்திருக்கின்றேன் என்று சொல்லுகின்றார்; மலை போன்ற கொங்கைகளையுடைய தோழியே, அவர் சொல்லும் குறிப்புத்தான் என்னையோ, கூறுக, எ. று.
மன்று - முருகனை வழிபடும் இடங்கள். “மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையும்” (முருகு) என நக்கீரனார் கூறுதல் காண்க. கதி-மேற்பிறப்பு. நசை- அன்பு. இன்று-இப்பொழுது. சுரர் உலகு-தேவர்கள் உலகம். கதி தர வந்தீரோ என்றவட்கு மேற்கதியாகிய தெய்வகதி தர வந்தேன் என்று பொருட்படச் “சுரருல கெய்திட வந்தேன் என்றார்” என்க. சுரருலகு-தெய்வப் பிறப்பினர் வாழும் உலகு. போகவுலகு என்றும் அது பொருள்பட நிற்றலால், போகம்நுகர வந்தேன் என்றும் பொருள்படுமாறு அறிக. இஃது இங்கித வுரை. இங்ஙனம், கவர் பொருள் படப் பேசுவதால், பக்குவ முற்ற நீ நன்கறிவாயாதலின், அவர் சொல்லின் குறிப்பு யாதெனத் தெளிந்து சொல்லுக என்பாளாய்க் “குன்றேர் முலையாய் அவர் சொல்குறிப்பு என்னடி” என்று கேட்கின்றாள்.
இதனால், கதி, சுரருலகு என்ற சொற்களைக் கொண்டு இங்கித வுரையாடியவாறாம். (11)
|