பக்கம் எண் :

504.

    சேதன நந்தார் சென்று வணங்குந் திறல்வேலார்
    தாதன வண்ணத் துள்ளொளிர் கின்ற தணிகேசர்
    மாதன முந்தா வந்தென வந்தே வாதாதா
    ஆதன மென்றா ரென்னடி யம்மா வவர்சூதே.

உரை:

     நல்லறிவுடைய சங்கேந்தும் திருமால் சென்று வணங்குகின்ற வெற்றி பொருந்திய வேற்படை யேந்திப் பூவின் பொற்றாது போன்ற நிறத்துடன் உள்ளத்தே ஒளி செய்கின்ற தணிகைமலைத் தலைவராகிய முருகப்பெருமான், பெரிய செல்வமாவது முற்பட வந்தது போல இங்கே என்பால்வந்து, 'யான் இருக்க ஆதனம் தா; தருதற்கு வாதம் வேண்டாம்' என்கிறார்; அவர் சொல்லின் கண்ணுள்ள சூது என்னவோ, தெரியவில்லையே, எ. று.

     நந்து-சங்கு. தன்னியல்பிற் சேதனமாயினும் பிறர் வாய் வைத்தூதும் பொருளாகிற போது அசேதனமாய் விடுதலால், சேதனம் என்ற அடை நந்தினைக் கையில் ஏந்தும் திருமாலுக் காயினமை யறிக. திறல் - வெற்றி. இயற்கை வன்மையால் வெற்றி யல்லது பெறாத வீறுடைமை பற்றித் “திறல் வேல்” என்று சிறப்பிக்கின்றார். தாது - பூவிடை யுள்ள பொன்னிறத் தாது. முருகப் பெருமான் சிவன் போலப் பொன்னிறத்தனாதல் விளங்கத் “தாதன வண்ணத்து” எனவும், அவனது மேனியிற்றிகழும் ஒளியும் பொன்னொளியாதல் பற்றித் “தாதன வண்ணத்து உள்ளொளிர்கின்ற தணி கேசர்” எனவும் போற்றுகின்றார். “பொய்யா நாவதனாற் புகழ்வார்கள் மனத்தினுள்ளே மெய்யே நின்றொளிரும் விளக்கே யொத்த பிரான்” (கழிப்பாலை) என்று நம்பியாரூரரும், “இன்னருனால் ஒளி வந்து என் உள்ளத்தின் உள்ளேஒளிதிகழ அளி வந்த அந்தணன்” (அம்மானை) எனத் திருவாதவூரரும் தெளியத் தெரிவிப்பது காண்க. மாதனம் - பெரிய செல்வம். முந்தா - முன்னதாக. ஆதனம் - ஆசனம். அல்குலைக் காட்டி, அதற்குப் பணம் என்றொரு பெயருண்மை கொண்டு, அத் தனத்தைத் தருக என்ற இங்கிதப் பொருளில் “தா ஆதனம் என்றார்” என்று பொருள் கொள்க. அத்தனம் என்பது செய்யுளாகலிற் சுட்டு நீண்டு ஆதனம் என வந்ததென்க. இங்கிதப் பொருள் இனிது விளங்காமையின், “என்னடி யம்மா அவர் சூது” என்று நங்கை தோழியிடம் உரையாடுகின்றாள்.

     இதனால், முருகன் உரையாடிய இங்கிதத்தை நங்கை தோழியொடு உசாவியவாறாம்.

     (12)