பக்கம் எண் :

506.

    பனிப்பற வருளும் முக்கட் பரஞ்சுடர்
        ஒளியே போற்றி
    இனிப்புறு கருணை வான்றேன் எனக்கருள்
        புரிந்தாய் போற்றி
    துனிப்பெரும் பவம்தீர்த் தென்னைச் சுகம்பெற
        வைத்தோய் போற்றி
    தனிப்பெருந் தவமே போற்றி சண்முகத்
        தரசே போற்றி.

உரை:

     அச்சமில்லை யாமாறு அருள் புரியும் மூன்று கண்களையுடைய மேலான சுடர் வடிவான சிவனிடத் தெழுந்த ஞான வொளியே, இனிப்பு மிகும் திருவருளாகிய உயர்ந்த தேனை எனக்கு அருளியவனே, வெறுக்கத் தக்கதாகிய பெரிய பிறப்பை நீக்கி என்னைச் சிவானந்தம் பெற வைத்தவனே, தனித்த பெருமையுடைய தவத்தின் பயனுருவே முகங்களை யுடைய அருளரசே, போற்றி போற்றி, எ. று.

     பனிப்பு - அச்சம். “இவ்வுலகில் எதனை நினைப்பினும் எதனை மொழியினும், எதனைச் செய்யினும் இடையூறுகள் தோன்றி அச்சம் தருதலால், அச்சம் சிறிதும் இன்றி நினைவும் சொல்லும் செயலும் இயங்கச் செய்வது நினைத்து இது திருவருளாலாய தென உணர்கின்றமை தோன்றப் “பனிப்பற அருளும் முக்கட் பரஞ்சுடர் ஒளியே” என்று பராவுகின்றார். முக்கட் பரஞ்சுடர், சுடரிடத் தெழும் ஒளி போலச் சிவனிடத்து வெளிப்பட்ட ஞான வொளிப் பொருளாவது தெளிந்து, “பரஞ்சுடர் ஒளியே போற்றி” என்று கூறுகின்றார். சுடரிற் றோன்றி ஒளி சென்று பரவுவது கண்டு, “சுடர் ஒளியே” என்பது குறிக்கத் தக்கது. “சோதியாய்ச் சுடருமானார்” (நெய்த்தா) என நாவுக்கரசரும், “சோதியே சுடரே” (அருட்) என மாணிக்கவாசகரும் பிரித்தோதிக் காட்டுவது காண்க. சோதி - ஒளி. பரஞ்சுடர்க் கண் தோன்றுவது பரவொளி; அதுவே முருகன் என்பதாம். இனிப்புறு தேன், கருணை வான் தேன் என இயையும். உள்ளத்தின் கண் உணர்வுருவாய் இன்பச் சுவை வடிவில் நுகரப்படுமாறு விளங்க, “இனிப்புறு கருணை வான் தேன் எனக்கருள் புரிந்தாய்” என்று போற்றுகின்றார். பவம் - பிறப்பு; விரும்பத் தக்க தன்மையின், “துனிப் பெரும் பவம்” எனவுரைக்கின்றார். திருவருளாலன்றி ஒழிக்க லாகாமை புலப்படப் “பெரும் பவம்” என்கின்றார். சுகம் - திருவருள் இன்பம். ஒப்பற்ற பெரிய தவ முடையோர் பெறும் பயன் யாதோ அதன் உருவாக விளங்குபவன் என்பதற்குத் “தனிப் பெருந்தவமே” என்றும், தவம் தரும் பயனையே தவம் என்னும் வழக்குப் பற்றித் “தவமே” என்றும் சாற்றுகின்றார்.

     (2)