பக்கம் எண் :

508.

    தவம்பெறு முனிவ ருள்ளத் தாமரை
        யமர்ந்தோய் போற்றி
    பவம்பெறுஞ் சிறியேன் தன்னைப் பாதுகாத்
        தளித்தோய் போற்றி
    நவம்பெறு நிலைக்கு மேலா நண்ணிய
        நலமே போற்றி
    சிவன்பெறும் பயனே போற்றி செங்கதிர்
        வேலோய் போற்றி.

உரை:

     தாம் செய்த தவத்தின் பயன்களைத் தடையின்றிப் பெறுகின்ற முனிவர்களின் மனமாகிய தாமரை மலரில் வீற்றிருப்பவனே, பிறப்பிறப்புக் குள்ளாகும் சிறுமையுடைய என்னைத் துன்பத்துக் கிரையாகாமற் பாதுகாத்தருள்பவனே, ஒன்பதாக எண்ணப்படுகின்ற உருவ நிலைகட்கு மேலாக எய்துகிற இன்ப வுருவனே, சிவபோகம் பெறும் பயன் வடிவே, சிவந்த ஒளி திகழும் வேலை யுடையவனே, போற்றி, போற்றி, எ. று.

     தவம் புரிவோர் பலர்க்குப் பயன் இடையறவு பட்டுக் கெடுதலுண்மையின், “தவம் பெறு முனிவர்“ எனவும், அவரது மனத்தாமரை முருகப் பெருமானுக்குத் திருக்கோயிலாதலால், “உள்ளத் தாமரை யமர்ந்தோய்” எனவும் கூறுகிறார். “அகனமர்ந்த அன்பினராய் அறு பகைசெற் றைம்புலனும் அடக்கி ஞானம், புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத் துள்ளிருக்கும் புராணர்” (வீழிமிழலை) என ஞானசம்பந்தர் எடுத்துரைப்பது காண்க. பவம் - பிறப்பு. சிறுமை யுடைமை காரணமாகப் பவம் எய்துமென அறிக. சிறுமை யுண்டாகாமைக் காத்தற் பொருட்டு இப்போற்றி செய்கின்றார் என்க. நவம் பெறும் நிலை; உருவம் நான்கு, அருவம் நான்கு, அருவுருவம் ஒன்று என்னும் ஒன்பது. இவற்றிற்கும் மேலாம் நிலை பரானந்த நிலை யென்பர். சிவபோகம் துய்ப்பார் பெறும் பயன் சிவானந்தம் என்பர் சேக்கிழார்.

     (4)