519. வேதமும் கலைகள் யாவும்
விளம்பிய புலவ போற்றி
நாதமும் கடந்து நின்ற
நாதநின் கருணை போற்றி
போதமும் பொருளு மாகும்
புனிதநின் பாதம் போற்றி
ஆதர மாகி யென்னுள்
அமர்ந்தவென் னரசே போற்றி.
உரை: வேதம் முதலாகச் சொல்லப்படுகின்ற கலை பலவும் உலகிற் குரைத்தருளிய புலவர் பெருமானே, நாத தத்துவத்தைக் கடந்து நிற்கின்ற தலைவனே, நின் கருணை போற்றி; அறிவும் அறிவால் அறியப்படும் பொருளுமாகிய தூயவனே, நின் திருவடிகள் போற்றி; அன்புடையவனாய் என் மனத்துள் எழுந்தருளிய என் அருளரசே, போற்றி, போற்றி, எ. று.
வேத முதலாகக் கற்றறியப் படும் கல்வித் துறை பலவும் கலையெனவும் நூலறிவு எனவும் பாச ஞானம் எனவும் அறிஞர்களால் வழங்கப் படுகின்றன. கலையென்னும் சொல் கலித்தல் என்னும் சொல்லடியாக வருதலின், செயல்வகையால் பெறுவது கலைஞானம் என்பது தெளிவாகும். “கலித்தல் நீக்குதலும் செலுத்துதலுமாகலின் மலத்தை நீக்குலற்தாகலையாயிற்று” (சிவஞா. பாடி. 2: 2: கலாதத்துவம்) என மாதவச் சிவஞான முனிவர் உரைப்பது காண்க. கலை, “கிரியா சத்தியை விளக்குவது” என்றலின், கண்டும் (Observation) செய்தும் (Experimentation) பெறுமறிவு கலைஞான மாதல் (Scientific knowledge) தெற்றென விளங்கும். தெளிவில்லாதவர் சொற்பொரு ளாராயாது செய்கின்ற பிழை பிற்காலத்தில் உண்மையறிவுக்கு இடம் கொடாமல் ஊனம் விளைத்து விடுகிறது. இது தமிழ்நாடு செய்த தீவினைகளில் ஒன்றாகும். ஆதியில் கலைகளை மக்கள் அறிவுக்கு நல்கியவன் முருகன் எனப்படுவது பற்றிக் “கலைகள் யாவும் விளம்பிய புலவ போற்றி” என்கின்றார். தத்துவத்துறையில் மேலாய சுத்த தத்துவத்தின் மத்தகத்திருப்பது நாத தத்துவம்; இது சிவத்துவம் எனவும் வழங்கும். அதற்கு மேலது மாயாதீத மெனப்படும் பரவெளி; அங்கே இருப்பது பரம்பொருள் ஒன்றே; அதுவே முருகனாதலால், “நாதமும் கடந்து நின்ற நாத” எனக் கூறுகின்றார். போதம் - அறிவு. அறியும் அறிவும் அறியப்படும் பொருளும் இறைவனே என்ற ஞான நூற் கருத்தைப் “போதமும் பொருளுமாகும் புனித” என்று புகல்கின்றார். இவையிரண்டையும் வடநூல்கள் ஞான ஞேயங்கள் என்று கூறுகின்றன. ஞேயத்துள் சத்தும் சித்தும் அசத்தும் அசித்து மாகிய பொருள்கள் விரவியிருப்பினும் அவற்றால் தொடக் குண்ணாத் தூயவன் என்பதற்குப் “புனித” என்பது நோக்கத் தக்கது. ஆதரம் - அன்பு; ஆதார மென்பதன் விகாரமாகக் கொண்டு எனக்கு ஆதாமராய் என்னுள் நின்று அருள்பவனே என்பாராய், “ஆதரமாகி என்னுள் அமர்ந்தருள் அரசே போற்றி” என்று பராவுகின்றார்.
இப் பதினைந்து பாட்டுக்களால் தணிகை முருகனை ஞானப் பொருள் விரவிய செஞ்சொற்களால் போற்றியவாறாம். (15)
|