பக்கம் எண் :

49. திருப்பள்ளித் தாமம் தாங்கல்

        அஃதாவது இறைவன் வழிபாட்டுக்கு எடுத்துத் தொகுத்துத் தூநீரிற் கழுவி மாலை தொடுத்தணியும் பூக்களாகிய திருப்பள்ளித் தாமத்தைக் குடலைகளில் வைத்துக் கொண்டு செல்லுதல். “தலைமிசைச் சுமந்த பள்ளித் தாமத்தைத் தடங்கா ளத்தி, மலைமிசைத் தம்பி ரானார் முடிமிசை வணங்கிச் சாத்தி” (கண்ணப். 124). எனச் சேக்கிழார் செப்புதல் காண்க. இப்பகுதியின் கண் வரும் பாட்டு மூன்றினுள்ளும் திருத்தணிகையில் முருகப் பெருமானுக்குப் பள்ளித் தாமத்தைக் குடலையில் வைத்து அன்பர்கள் தோளிற் சுமந்து மலைமிசைப் படியேறிச் செல்வது கண்டு இறும்பூதுற்ற வள்ளற் பெருமான், அது செய்யாது வெறிதாகிய உடலைச் சுமந்து கொண்டும் தாம் திரிவதை நினைந்து வருந்திப் பாடுகின்றார். தணிகை முருகனுக்குச் சிறப்பாக வுரியது குவளை மலராதலின் அதனை இறுதிப் பாட்டில் வைத்து மறவா வண்ணம் ஓதுவது இன்பம் தருவதாம்.

அறுசீர்க் கழிநெலடி ஆசிரியடி விருத்தம்

520.

    வெம்பு முயிருக் கோருறவாய்
        வேளை நமனும் வருவானேல்
    தம்பி தமையன் துணையாமோ
        தனையர் மனைவி வருவாரோ
    உம்பர் பரவும் திருத்தணிகை
        உயர்மா மலைமே லிருப்பவர்க்குத்
    தும்பைக் குடலை யெடுக்காமல்
        துக்க வுடலை யெடுத்தேனே.

உரை:

     பல்வகை நோய்களால் வருந்தும் எனது உயிருக்கு ஓர் உறவினன் போல இறுதிக் காலத்து வருபவனாகிய இயமன் வருகுவனாயின், தம்பி அண்ணன் ஆகியவர் துணை கூடுமோ? புதல்வர் மனைவி என்பவர் தாமும் என்னோடு உடன் வருவார்களோ? இதனை நினையாமல் தேவர்கள் வந்து வழிபடும் திருத்தணிகையாகிய உயர்ந்த பெரிய மலைமேல் இருக்கின்ற முருகப் பெருமானுக்குத் தும்பை மலர் நிறைந்த பூக்குடலையைத் தோளிற் சுமக்காமல் துக்கம் விளைக்கின்ற உடம்பைத் தூக்கிச் செல்கின்றேனே, என்னுடைய அறியாமையை என்னென்பது! எ. று.

     பலவகையான நோய்கள் வந்து தாக்குவதால் வெதும்பி வருந்துவது உடம்பே யெனினும், நோயை யுற்றுத் துன்புறுவது உயிராதல் கண்டு, இடர் மிக்க சூழலிலிருந்து துயருறும் ஒருவனைக் காணும் அவனுடைய உறவினன் போந்து தன்னுடன் கொண்டு நீங்குவது போல இயமன் போந்து உடலினின்றும் அவ் வுயிரைக் கொண்டு தலைக் கழிகின்றானென்பாராய், “வெம்பும் உயிருக்கு ஓர் உறவாய் வேளை நமனும் வருவானேல்” என்று கூறுகிறார். வெம்பும் உயிர்-வெம்மை யுறும் உயிர். வெம்புதல் - வெம்மை செய்தல். “மேல் வெம்புஞ் சுடரின் சுடரும் திரு மூர்த்தி” (சீவக) என்று திருத்தக்க தேவர் உரைப்பது காண்க. ஓருறவு - உயர்ந்த உறவினன்; நெருங்கிய வுறவு என்பது போல. அவன், வர மறுத்தாலும் ஈர்த்துக் கொண்டேகும் தொடர் புடையவனாவான். வேளை, ஈண்டுச் சாகுங் காலத்தின் மேலது. தம்பி, தமையன்: தன்னுடம்பு தோன்றிய தாய் வயிற்றில் முறையே தனக்குப் பின்னும் முன்னும் தோன்றியவர். தமையனிலும் தம்பிக்கு உடம்பின் தொடர்பு மிகுதியாதலின், அவனை முற்பட மொழிகின்றார். தனையர் - பற்ற மக்கள். ஒருகால் மனைவி வருவ துன்மையின் மனைவியை இறுதியில் வைத்துச் சிறப்பிக்கின்றார். என்னுயிரைக் கணவ னுயிருடன் சேர்ப்பே னென உடனுயிர் போக்கும் மகளிரைக் காண்கின்றோ மன்றோ! “வானவர் போற்ற மன்னொடும் கூடி, வானவர் போற்ற வானகம் பெற்றனள்” (சிலப். காட்சி. 59-60) என்பது ஈண்டு எண்ணற் பாலது. தணிகை மலையை உயர் மாமலை என்றதற்கு உம்பர் பரவுதல் ஒரு காரணம் எனினும், அப்போது வள்ளற் பெருமான் காலத்தில் தணிகை மலையிற் படிகள் மிக உயரமாய் ஏறுபவர்க்கு மிக்க வருத்தத்தை தந்தன; இவ்வுரைகாரர் தணிகை முருகப் பெருமானை வழிபடச் சென்ற போது படியேறுகையிற் பட்ட வருத்தத்தால் உயர் மாமலை யென்றது பொருத்தமே எனத் தம் நண்பர்கட்குக் கூறியுள்ளார். தும்பைக் குடலை - தும்பைப் பூவால் தொடுக்கப் பட்ட மாலையை எடுத்துச் செல்லும் ஓலைக் கூடை; இது தென்னை யோலையால் முடையப் படுவது. தும்பைக் குடலைச் சுமப்ப தாயினும் முருகனுக்குச் செய்யலாகும் சிறு திருப்பணியாகுமே என்பது கருத்து.

     இதனால், இவ்வுடலைச் சுமந்து வெறிது சாதலினும் முருகப் பெருமானுக்குப் பூக்குடலை சுமப்பது திருப்பணியா மெனத் தெரிவித்தவாறாம்.

     (1)