பக்கம் எண் :

521.

    தொல்லைக் குடும்பத் துயரதனில்
        தொலைத்தே னந்தோ காலமெலாம்
    அல்ல லகற்றிப் பெரியோரை
        யடுத்து மறியே னரும்பாவி
    செல்வத் தணிகைத் திருமலைவாழ்
        தேவா வுன்றன் சன்னிதிக்கு
    வில்வக் குடலை யெடுக்காமல்
        வீணுக் குடலை யெடுத்தேனே.

உரை:

     துன்பம் நிறைந்த குடும்பத் தொல்லைகளில் ஆழ்ந்து என்னுடைய காலத்தை வீணிற் போக்கினேன்; அவற்றினின்றும் நீங்கிப் பெரியோர்களை யடுத்து நீக்குதற் கரிய பாவி யாதலால் அவர் காட்டும் வழியிலும் நில்லா தொழிந்தேன்; செல்வ மிக்க திருத்தணிகை மலையில் எழுந்தருளும் தேவனே, உனது திருமுன்பு வில்வம் நிறைந்த பூக்குடலையைச் சுமக்கும் பணியையும் செய்யாமல் இவ்வுடம்பைச் சுமந்து வீணனானேன், எ. று.

     தொல்லை - துன்பம்; தொல்லை, துயரம், அல்லல், அவலம் என வரும் சொற்கள் யாவும் துன்பத்தைக் குறிப்பன வாகும். துன்பம் தோன்றுமாயின், அதனைப் போக்குதற்குச் செய்யும் முயற்சிகள் பலவும் துன்பத் தொடர்பா யிருத்தலால் தொல்லை யென்றே சொல்லப் படுகின்றன. தொல்லை யில்லாத குடும்பமே யில்லை யாதலால், “தொல்லைக் குடும்பம்” என்று சிறப்பிக்கின்றார். குடும்ப மென்பது குணமும் குற்றமும் பொருந்திய மக்கள் இருந்து நடத்துவ தாதலால், குற்ற முண்டாதலும் அதனால் துன்பம் வருவதும் இயல்பு. இன்பமே மக்களால் விரும்பப்படுதலின் குற்றத்தைத் தடுப்பதிலும், உண்டாய வழிப் போக்குவதிலும் செயல் வகை யனைத்தும் இயங்குவது கொண்டே குடும்பம் இடும்பைக்குக் கொள்கலம் என்று பெரியோர் கூறுப. “இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு” (குறள்) எனத் திருவள்ளுவர் தெரிவிக்கின்றார். அந்த இடும்பையை வள்ளலார் இங்கே “துயர்” எனச் சொல்லுகிறார். அதனால் துன்பம் அறவே நீங்காமையால், “தொலைத்தேன் அந்தோ கால மெல்லாம்” என்று உரைக்கின்றார். அத் தொல்லைகளை மனத்திற் கொள்ளாமல் விட்டு நீங்க முயன்றேன்; யான் செய்துள்ள பாவம் என்னைத் தடுத்து விட்டது என்பார், “அல்லல் அகற்றிப் பெரியோரை அடுத்தும் அறியேன் அரும் பாவி” என இசைக்கின்றார். பெரியோர் என்றது. ஈண்டுக் குடும்ப வாழ்வைத் துறந்த பெரு மக்களை. பெரியோர் சிலருடைய தொடர்பு பெற்றும், அவர் காட்டிய நெறிகள் தமது அறிவுக்கு ஒவ்வா தொழிந்தமை விளங்கப் “பெரியோரை அடுத்தும் அறியேன்” எனவும், அறியாமைக்குக் காரணம் முன்னைத் தீவினை யென்பாராய், “அரும் பாவி” எனவும் அறிவிக்கின்றார். பாவம்-தீவினை; பாவம் செய்தவன் பாவி. அருமை - நீக்கற் கருமை. இக் கருத்தையே, “ஓடி யுய்தலும் கூடுமன், ஒக்கல் வாழ்க்கைத் தட்குமாகாலே” (புறம்) என்று சான்றோர் கூறுகின்றனர். வில்வம், ஒருவகை மரம்; இதனைக் கூவிளம் என்பாருமுண்டு; இது வில்லம் எனவும் வழங்கும். வில்லா எனப் பூவகை யொன் றுண்டு. “வில்லாப் பூவின் கண்ணி சூடி” (நற். 146) என வருதல் காண்க. உடல் சுமந்து வாழ்ந்ததிற் பயன் ஒன்றும் கண்டிலேன் என்பார், “வீணுக்கு உடலை யெடுத்தேன்” என விளம்புகிறார்.

     இதனால், குடும்பத் தொல்லையின் நீங்கிப் பெரியோரை யடுத்து அவர் வழி நில்லாமலும் முருகனுக்குப் பணி புரியாமலும் வீணனானேன் என வருந்தியவாறாம்.

     (2)