522. அவல வயிற்றை வளர்ப்பதற்கே
அல்லும் பகலு மதினினைவாய்
கவலைப் படுவ தன்றிசிவ
கனியைச் சேரக் கருதுகிலேன்
திவலை யொழிக்கும் திருத்தணிகைத்
திருமால் மருகன் திருத்தாட்குக்
குவளைக் குடலை யெடுக்காமல்
கொழுத்த வுடலை யெடுத்தேனே.
உரை: வன்மையில்லாத வயிற்றை வளர்த்தற் காகவே இரவும் பகலும் அதனையே நினைவிற் கொண்டு வருத்தப் படுவ தொழியச் சிவபெருமான் அளித்த கனி போன்ற முருகப் பெருமானை யடைவதற்கு உரியவற்றை எண்ணுவது இல்லாதவனாகிய யான், நளிர் நோய்களைப் போக்கும் திருத் தணிகையிற் கோயில் கொண்டருளும் திருமாலுக்கு மருமகனாகிய முருகப் பெருமான் திருவடிக்கு அணியும் குவளைப் பூக்களைக் கொண்டு வரும் பூக்குடலையைத் தோளில் சுமக்காமல் கொழுப்பு நிறைந்த உடம்பை எடுத்துத் திரிகின்றேன்; என் பேதைமையை என்னென்பது! எ. று.
அவலம், ஈண்டு வலி யின்மை குறித்தது. இடப்படும் உணவு சிறிது மிகினும் குறையினும் பொறுக்க மாட்டாது துன்புறுவது பற்றி, “அவல வயிறு” எனவும், நாடோறும் காலம் தவறாமல் அளவோடு தந்தா லல்லது உடல் வளர்ச்சி இனிது நிகழாமை விளங்க, “வளர்ப்பதற்கே” எனவும் கூறுகின்றார். இரவுப் போதிலும் தொழில் புரிவ துண்மையால், “அல்லும்” எனக் கூறுகின்றார். கவலைப் படுவது, ஈண்டு உழைப்பது குறித்ததாம். வல்லெழுத்து இன்றிச் சிவகனியை என வல்லொற்று மிகா தொழிந்தது சந்த வின்பம் நோக்கி யென அறிக. திவலை-நளிர் சுரம் எனப்படும் குளிர் காய்ச்சல் நோய். திருத்தணிகைச் சுனை முப்போதும் குவளை மலரும் சிறப்புடைமையால் குவளைக் கிரி எனத் தமிழிலும் அல்லகாத்திரி என வடமொழியிலும் கூறப் படுவ தெனத் தணிகைப் புராணம் (புரா. வர. 59) தெரிவிக்கிறது. தணிகை முருகனுக்குக் குவளை மாலை சிறந்த தென்றலால், “குவளைக் குடலை” யை விதந்தோதுகிறார்.
இதனால் தணிகையில் முருகப் பெருமானுக்குச் சிறப்புற வமைந்த குவளை மாலை கொண்டு செல்லும் திருப்பணியைச் சிறப்பித்தவாறாம். (3)
|