50. சண்முகர் கொம்மி
அஃதாவது சண்முகப் பெருமானைப் பொருளாக
வைத்து மகளிர் வட்டப்பட நின்று விற் போல் குனிந்தும்
நிமிர்ந்தும் கைகள் இரண்டினையும் அடுக்களைக் கொம்மை
போற் குவித்து ஓசை யுண்டாகத் தட்டி விளையாடுதல்.
அப்போது அவர்கள் மலர் வாயால் ஒருத்தி எடுத்துப் பாட
மற்றவர்கள் அதனையே வாங்கிப் பாடுவர். இதனைப்
பொப்பண்ணன் என்னும் கொங்கு நாட்டுக் காங்கேய
நாட்டுத் தலைவனான வள்ளற் பெருமான் அருள் நீழலில்
இருந்து, சேரர் இளங்கோ அமைத்த சிலப்பதிகாரமென்னும்
செஞ்சொற் கோயிலுக்கு உரைத் திருப்பணி புரிந்தருளிய
அடியார்க்கு நல்லார் காட்டிய நெடு வெண்பாட்டு இக்
கொம்மியைக் தஞ்சாத கும்மை எனக்
குறிக்கின்றது. இக் கும்மை, கொம்மை, கும்மி, கொம்மி என
வழங்குகிறது. உடற்ற வரு தீவினை யினைக் கொம்மை
கொட்டினன் (வீராட்ட. 26) எனத் தணிகைப்புராணம்
வழங்குவது காண்க. இதன்கண் முருகனது தத்துவக் கோலமும்,
ஞானத் திருவுருவும், சகள வுருவிற் செய்த திருவுளையாடலும்,
திருவருள் நலமும், பிறவும் படிப்போரும் பாடுவோரும்
கேட்போரும் எளிதில் இனிதுணரும் வகையிற் பாடியுள்ளார்.
இங்கே காணப்படும் பாட்டுக்கள் இறந்து போன இசைத்
தமிழ்ப் பகுதியில் இருக்கும் வரிப்பாட்டு வகையுள் ஒன்று
என அடியார்க்கு நல்லார் குறிக்கின்றாராகலின் இயற்
றமிழ்ச் செய்யுள் இலக்கணம் கொண்டு முறை செய்தற்
கிடமில்லை. எழுசீர்க் கழிநெடிலடி யிரண்டு கொண்டு
மூன்றாஞ் சீர்க்கும் நான்காம் சீர்க்கும் இடையே
ஓரசையும் ஈரசையும் பெற்ற தனிச்சீர் பெய்து அடிதோறும்
ஈற்றுச்சீர் ஒன்றி வரத் தொடுப்பது இதற்கியல்பு
போலும்.
523. குறவர் குடிசை நுழைந்தாண்டி - அந்தக்
கோமாட்டி எச்சில் விழைந்தாண்டி
துறவர் வணங்கும் புகழாண்டி - அவன்
தோற்றத்தைப் பாடி யடியுங்கடி.
உரை: புலவர் அரிதின் முயன்று பொருள் காணும் திரிசொற்கள் சிறிதுமின்றி இனிய எளிய சிந்திப்பவர் சிந்தை நோவா வண்ணம் செஞ்சொற்களால் இக்கண்ணிகள் அமைந்திருத்தலால் சொற்பொருள் விரிக்கப் படவில்லை. அரிய குறிப்புப் பொருள்கள் ஆங்காங்குத் தரப்படுகின்றன.
கோமாட்டி - தலைமகளாகிய வள்ளிநாயகி. எச்சில் - உண்டெஞ்சிய மிச்சம். இது மிச்சில் என்றும் வழங்கும். “மிச்சில் மிசைவான் புலம்” (குறள்) என்றாற் போல. துறவர் - மாவிரதிகள்; மாவிரத மென்னும் அகச் சமயத் துறவிகள் பிறர் உண்டெஞ்சிய மிச்சத்தை யுண்ணார். மாவிரதர், பாசுபதர், காபாலிகள் முதலியோர் நம் நாட்டில் இருந்ததைத் தேவாரத் திருமுறையும் மகேந்திரவன்ம பல்லவ னெழுதிய மத்தவிலாசப் பிரகசனமும் கூறுகின்றன. வள்ளியம்மை யுண்டு சுவைத்துத் தந்த தினைமாவை முருகன் உண்டானாகவும், அவனை மாவிரத சமயத் துறவிகள் விலக்காமல் வழிபட்டனர் என்ற கருத்து விளங்கக் “கோமாட்டி எச்சில் விழைந்தாண்டி” என்றவர், “துறவர் வணங்கும் புகழாண்டி” என்று கூறுகின்றார். குறவர் குடிசையை உடம்பாகவும், வள்ளியம்மையை அதனுள் ளிருக்கும் ஆன்மாவாகவும், திருப்பாதிரிப்புலியூர் சிவத்திரு சிவ சண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சாமிகள் கூறுவர். நுழைந்தானடி, விழைந்தானடி என்பன நுழைந்தாண்டி, விழைந்தாண்டி என மருவின. பிற வருமிடங்களிலும் இதுவே கூறிக் கொள்க. (1)
|