530. வேதமுடி சொல்லும் நாதனடி - சதுர்
வேத முடிதிகழ் பாதனடி
நாத வடிவுகொள் நீதனடி - பர
நாதம் கடந்த நலத்தனடி.
உரை: வேத முடி சொல்லும் நாதன் - வேத முடிவு எனப்படும் வேதாந்த நூல்களான உபநிடதங்கள் உரைக்கின்ற பிரமம். சதுர்வேத முடி - நான்கு வேதங்களின் முடிவுல் ஓதப்படும் சாந்தி என்ற நிலை; முருகன் திருவடி, சாந்தி நிலையம் என்பது. நாத தத்துவ வடிவமாகிய ஞான வடிவு, “நாத வடிவு” எனப்படுகிறது. அதன் உள்ளுறையாய் நிலவும் சிவ பரம்பொருள் “நீதன்” என்ற சொல்லாற் குறிக்கப்படுகிறது. நீதன் - நீதி யுருவானவன். “நீதி பலவும் தன்ன வுருவா மென மிகுத்தவன்” (வைகா) என ஞான சம்பந்தர் உரைப்பது காண்க. பரநாதம் - மேம்பட்டதாகிய சிவ தத்துவம், அதனைக் கடந்தது பரசிவ வெளி: பராகாயம் என்றும் அது வழங்கும். நலத்தன் - நலம் உடையவன். (8)
|