5301. அண்டஅப் பாபகிர் அண்டஅப் பாநஞ் சணிந்தமணி
கண்டஅப் பாமுற்றும் கண்டஅப் பாசிவ காமிஎனும்
ஒண்தவப் பாவையைக் கொண்டஅப் பாசடை ஓங்குபிறைத்
துண்டஅப் பாமறை விண்டஅப் பாஎனைச் சூழ்ந்தருளே.
உரை: அண்டங்களையும் அவற்றிற்கு மேலுள்ள வெளியண்டங்களையும் படைத்தருளிய அப்பனே! நஞ்சு தங்கிய நீலமணி போன்ற கழுத்தை உடையவனே! எல்லாவற்றையும் படைத்தவனே! சிவகாமி என்னும் ஒள்ளிய தவச் செல்வியை உடையவனே! சடையின்கண் திகழ்கின்ற பிறைத் திங்களை உடையவனே! வேதங்களை முதலில் உரைத்தருளிய முதல்வனே! எளியவனாகிய என்னை நினைந்தருள்க. எ.று.
பகிரண்டம் - கூறப்படும் அண்டங்களுக்கு மேலாய் விளங்கும் வெளி யண்டங்கள். அண்ட சராசரங்கள் யாவற்றையும் படைத்தவன் என்றற்கு, “முற்றும் கண்ட அப்பா” என்று கூறுகின்றார். இளமைப் பருவத்தையே சிவனை மணந்து கொள்ள வேண்டும் என்று பெருந்தவம் புரிந்தவளாகையால் உமாதேவியைச் “சிவகாமி” என்றும், “ஒண்தவப் பாவை” என்றும் உரைக்கின்றார். இளம் பிறைத்திங்களைப் “பிறைத் துண்டம்” என்று குறிக்கின்றார். (6)
|