பக்கம் எண் :

531.

    தத்துவத் துள்ளே அடங்காண்டி - பர
        தத்துவ மன்றித் துடங்காண்டி
    சத்துவ ஞான வடிவாண்டி - சிவ
        சண்முக நாதனைப் பாடுங்கடி.

உரை:

     தத்துவம் - உண்மை. பரம்பொருள் உலகுயிர்களோடு தொடர்புறும் அடிப்படை உண்மைக் கூறுகள் தத்துவம் என்ற வட சொல்லாற் கூறப் படுகின்றன. நாம் வாழும் நிலமும் ஒரு தத்துவம்; நீரும் ஒரு தத்துவம்; இவைபோலவே நம் உடம்பும் ஒரு தத்துவம்; கண் காது முதலிய ஒவ்வொன்றும் ஒரு தத்துவம். தத்துவங்களிலுருந்து காணப்படும் கூறுகள் தாத்துவிகம் எனப்படும். தத்துவங்களை அவற்றின் வேறாய் நின்று படைக்கிறானாதலால், “தத்துவத் துள்ளே அடங்காண்டி” என்றும், தத்துவங்களின் வாயிலாகவே தன்னை உலகுயிர்களோடு பிணித்துக் கொண்டு அத் தத்துவங்களினூடே தன்னைக் காணக் காட்டுகிறானாதலால், “தத்துவ மன்றித் துடங்காண்டி” என்றும் கூறுகிறார். துடங்குதல், துடக்குதல் என்பதன் விகாரம். துடக்குதல் - பிணித்தல். சத்துவ ஞான வடிவு - சத்துவ குண மேம்பாட்டில் தொழிற்படும் ஞானத் திருவுருவம். சிவத்தின் முகம் ஐந்தனோடு அதோமுகம் ஒன்று தோன்றி அம்முகம் ஆறிலிருந்தும் அறுமுகன் தோன்றினமை விளங்கச் “சிவ சண்முக நாதன்” என மொழிகின்றார்.

     (9)