536. இராப்பகல் இல்லா இடத்தாண்டி - அன்பர்
இன்ப வுளங்கொள் நடத்தாண்டி
அராப்பளி யீந்த திடத்தாண்டி - அந்த
அண்ணலைப் பாடி யடியுங்கடி.
உரை: இராப் பகல் இல்லா இடம் - இரவும் பகலும் இல்லாத பரவெளி. சூரிய சந்திரர்களால் உண்டாகும் பகலும் இரவும் மாயா மண்டலத்துக் குள்ளே அமைந்த அண்டங்களில் இருப்பன வாதலால், அந்த மண்டலத்துக்கு அதீதமா யுள்ளது பரவெளி யாதலால், அதனை “இராப்பகல் இல்லாத இடம்” என்கிறார். அன்பர் இன்ப உளம் - மெய்யன்பர்களுடைய ஞான இன்பம் நிறைந்துள்ள மனம். அதனையே தனக்கு நடம் புரியும் இடமாகக் கொள்பவர் என்பதற்கு “உளங் கொள் நடத்தாண்டி” என்று சொல்கிறார். அராப்பள்ளி யீந்த திடம் - ஆதிசேடனாகிய
திருமாலுக்குப் படுக்கையாகத் தந்த வன்மை யுடையவன். (14)
|