537. ஒன்றிரண் டான உளவாண்டி - அந்த
ஒன்றிரண் டாகா அளவாண்டி
மின்திரண் டன்ன வடிவாண்டி - அந்த
மேலவன் சீர்த்தியைப் பாடுங்கடி.
உரை: ஒன்றிரண்டான உளவு - அருட் சோதியான ஆண்டவன் சிவமும் முருகனுமான இரண்டு உருவாய்ச் சகளீகரித்த நிலை. அகளமாய் நின்ற நிலையில் இரண்டும் வேறு வேறு அல்லவாதலால், “ஒன்றிரண்டாகா அளவாண்டி” என்று சொல்கிறார். “உருவம் வேறன்றி யைந்து முகனது முகனென்றோதும், திருவுரு விரண்டன் மாட்டுஞ் சிவமெனும் யாமே மன்ற, பொருவிலா ருயிராய் நிற்பேம்” (வீராட்டு. 97) என்று தணிகைப் புராணம் கூறுவது காண்க. மின் திரண்டன்ன வடிவு - மின்னல்களைத் திரட்டி யெடுத்தது போன்ற ஒளி வடிவம். (15)
|