பக்கம் எண் :

51. சண்முகர் வருகை

        அஃதாவது, அறுமுகக் கடவுள் வருகிற குறிப்பறிந்து இளமகளிர் விடியற் காலையில், அவரை வரவேற்கும் பாட்டு. இது சிந்து என்னும் வரிப்பாட்டு வகையுள் ஒன்று. இது மூன்றடியால் இயன்று, முதலடி அளவடியாலும், பின்னிரண்டடி சிந்தடியாலும் அமைந்து சிந்தடியின் ஈற்றுச் சீர் ஒன்றிவரத் தொடுக்கப் பட்டுள்ளது. பல் வரிக் கூத்து வகையுள், இச்சிந்து தலையாயது என்று விளங்க, அடியார்க்கு நல்லார் இதனை முதன்மையாக வைத்துக் காட்டுகின்றார். இதன்கண் முருகனை வரவேற்கும் மகளிர், விடியற் கால நிகழ்ச்சிகளை எடுத்தோதுவது நோக்கத் தக்கது.

சிந்து

538.

    வாரும் வாரும் தெய் வடிவேல் முருகரே
        வள்ளி மணாளரே வாரும்
        புள்ளி மயிலோரே வாரும்.

உரை:

     தெய்வ வடிவேல்-தெய்வத் தன்மையும் இயல்பிலேயே கூர்மையுமுடைய வேல், வள்ளி மணாளர் - தானே விரும்பி மணந்து கொள்ளப் பட்டவளாதலின் வள்ளியை விதந்து கூறுகின்றார். புள்ளி மயில்-கண் போன்ற புள்ளிகளையுடைய மயில்.

     (1)