கல
கலிப்பா
5456. பிச்சுலகர் மெச்சப் பிதற்றிநின்ற பேதையனேன்
இச்சைஎலாம் எய்த இசைந்தருளிச் செய்தனையே
அச்சம்எலாம் தீர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன்
நிச்சலும்பே ரானந்த நித்திரைசெய் கின்றேனே.
உரை: பித்து கொண்ட மண்ணுலகத்தவர் புகழுமாறு பலவற்றைச் சொல்லித் திரிந்த பேதையாகிய என்னுடைய விருப்பமெல்லாம் கைகூடுமாறு மனமுவந்து எனக்கு அருளிச் செய்தாய்; அதனால் என்னை ஆண்டுகொண்ட பெருமானே! என் நெஞ்சிலுள்ள பயமனைத்தும் போக்கி உனது திருவருள் ஆகிய அமுதத்தை உண்டு நாள்தோறும் பெரிய சிவானந்தமாகிய நித்திரையில் கிடந்து இன்புறுகின்றேன். எ.று.
பித்து என்பது பிச்சு என வந்தது. மெச்சுதல் - புகழ்தல். இச்சை - ஈண்டு விரும்பிய பொருள்களையும் செயல்களையும் குறித்து நிற்கின்றது. அச்சம் - பயம். அருள் ஞானமாகிய அமுதத்தை உண்டதினால் யாதோர் அச்சமுமின்றிப் பேரின்ப நித்திரை செய்கின்றேன் என்பது கருத்து. (161)
|