பக்கம் எண் :

126. சிற்சத்தி துதி

    அஃதாவது, உமாதேவியாகிய சிவசத்தியை அருள் செய்யுமாறு துதிப்பதாம். சிவசத்தி ஞான உருவினதாதலால் அதனைச் சிற்சத்தி என்று பெரியோர் கூறுவதுபற்றிச் “சிற்சத்தி” என்று குறிக்கின்றார். அதனையே அருள் வழங்கும் சிறப்புப் பற்றி அருட்சத்தி என்றும் கூறுவர். இங்கே பாட்டுத்தோறும் அருள் புரியுமாறு வேண்டுதலால் சிற்சத்தியின் அருள் உருவத்தையே விதந்து சிவகாமி என்றும், சிவஞானக் கொடி என்றும், சிவபோகக் கொடி என்றும் போற்றிப் புகழ்கின்றார். தத்துவ நூலார் அருட் சத்தியை “விந்து சத்தி” என்றும் விளம்புவர்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5457.

          சோதிக் கொடியே ஆனந்த சொருபக் கொடியே சோதிஉருப்
          பாதிக் கொடியே சோதிவலப் பாகக் கொடியே எனைஈன்ற
          ஆதிக் கொடியே உலகுகட்டி ஆளுங் கொடியே சன்மார்க்க
          நீதிக் கொடியே சிவகாம நிமலக் கொடியே அருளுகவே.

உரை:

     ஒளி பொருந்திய கொடி போல்பவளும் ஆனந்த உருவினளும், அருட் சோதியாகிய சிவனுடைய உருவில் இடப்பாகத்தில் கொண்டவளும், வலப்பாகத்தைக் கொண்டவளும், என்னைப் பெற்ற தாயாகியவளும், உலகுகளைக் கட்டி ஆளுபவளும், சன்மார்க்க நீதியாகியவளுமான சிவகாமி எனப்படும் தூய கொடி போன்றவளே! எனக்கு உனது திருவருளாகிய ஞானத்தைத் தந்தருளுக. எ.று.

     அருட்பெருஞ் சோதியாதலால் சிவ சிற்சத்தியை, “சோதிக் கொடியே” என்று சொல்லுகின்றார். சிற்சத்தியைப் பெண்ணாக உருவகம் செய்து பராவுவது மரபாதலால், “சோதிக் கொடியே” என்று எடுத்த எடுப்பிலேயே போற்றுகின்றார். கொடி போல்பவளைக் கொடி என்பது உபசாரம். இனி வருமிடங்களில் எல்லாம் இதுவே கூறிக் கொள்க. சோதியாகிய சிவனுருவில் கலந்து விளங்குபவளாதலால், இடப்பாகத்திலும் வலப்பாகத்திலும் அவளது உருவே விளங்குவது பற்றி, “சோதி உருப்பாதிக் கொடியே சோதி வலப்பாகக் கொடியே” என்று கூறுகின்றார். ஒரு பாகத்தை வலப்பாகக் கொடி என்பதால், பாதிக் கொடி இடப்பாகமாயிற்று. ஆதி -தாய். உலகுயிர்களை வாழ்வித்தல் வேண்டி உலக வாழ்வில் பிணித்து அருள் செய்தலால், “உலகு கட்டி ஆளுங் கொடியே” என்று போற்றுகின்றார். நீதியே அவளது தனித்த உரு என்றற்கு, “சன்மார்க்க நீதிக் கொடியே” என உரைக்கின்றார். சன்மார்க்கமே நீதி என உணர்க. சிவத்திற் பிரியாமல் ஒன்றி இருத்தலால் சிவ சிற்சத்தியை, “சிவகாமக் கொடி” என்று சிறப்பிக்கின்றார். விமலம் - தூய்மை. திருவருள் ஞானத்திற்கு முதல்வியாதலால், “அருளுக” என்று வேண்டுகிறார். இப்பகுதி முற்றும் சிற்சத்தி ஒன்றையே பல சொற்களால் போற்றிப் பரவுவதால் இது ஆர்வ மொழி என்னும் அணியாம்.

     (1)