5466. ஏட்டைத் தவிர்தென் எண்ணம்எலாம்
எய்த ஒளிதந் தியான் வனைந்த
பாட்டைப் புனைந்து பரிசளித்த
பரம ஞானப் பதிக்கொடியே
தேட்டைத் தனிப்பேர் அருட்செங்கோல்
செலுத்தும் சுத்த சன்மார்க்கக்
கோட்டைக் கொடியே ஆனந்தக்
கொடியே அடியேற் கருளுகவே.
உரை: அறியாமையைப் போக்கி என் எண்ணங்கள் எல்லாவற்றையும் கைகூடுமாறு உரிய அறிவைத் தந்து யான் பாடிய பாட்டுக்களை ஏற்றுக்கொண்டு திருவருளாகிய பரிசினை எனக்கு வழங்கி அருளிய பரமஞானப் பதியாகிய சிவனோடு ஒன்றி அருளிய பரமஞானப் பதிக்கொடியும், தேடப்படுகின்ற தனித்த பெரிய அருள் நெறியைப் பரப்புதற்கென அமைந்த சுத்த சன்மார்க்கமாகிய கோட்டையின்கண் எழுந்தருளும் கொடி போல்பவளுமாகிய சிவானந்தக் கொடியே! எனக்கு அருள் புரிவாயாக. எ.று.
ஏடு - இஃது அறியாமை மேல் நின்றது. அது மெய்யறிவால் நீங்குவது பற்றி அதனை “ஒளி” என உரைக்கின்றார். மேலான சிவ ஞானமே சிவத்துக்கு உருவாதலின் அதனைப் “பரமஞானப் பதி” எனப் பகர்கின்றார். தேட்டை - தேடப்படுவது. அருட் செங்கோல் செலுத்துவதாவது - அருளாகிய ஞான நெறியைப் பரப்புவது. அதனைச் செய்வது சுத்த சன்மார்க்கமாதலால் அதனுடைய வன்மை மிகுதி தோன்ற, “சுத்த சன்மார்க்கக் கோட்டை” என்று சொல்லுகின்றார். (10)
|