5468. மாதவத்தால் நான்பெற்ற வானமுதே எனது
வாழ்வேஎன் கண்ணமர்ந்த மணியேஎன் மகிழ்வே
போதவத்தால் கழித்தேனை வலிந்துகலந் தாண்ட
பொன்னேபொன் அம்பலத்தே புனிதநடத் தரசே
தீதவத்தைப் பிறப்பிதுவே சிவமாகும் பிறப்பாச்
செய்வித்தென் அவத்தையெலாம் தீர்ந்தபெரும் பொருளே
பூதலத்தே அடிச்சிறியேன் நினதுதிரு வடிக்கே
புகழ்மாலை சூட்டுகின்றேன் புனைந்துகலந் தருளே.
உரை: பெரிய தவப் பயனாக எனக்கு எய்தப்பெற்ற தேவருலக அமுதும் என் வாழ்வும் என் கண்ணில் உள்ள மணியும் எனக்கு மகிழ்ச்சி தருபவனுமாகிய சிவனே! வாழ்நாளை வீணே கழித்த என்னை வலிந்து பற்றி ஆண்டருளிய பொன்னும் பொன்னம்பலத்தில் நடம் புரிகின்ற தூய அருளரசும் ஆகியவனே! குற்றம் நிறைந்ததாகிய இப்பிறப்பே சிவமாகும் பிறப்பாகச் செய்து என் துன்பம் எல்லாவற்றையும் தீர்த்தருளிய பரம்பொருளே! இந்நிலவுலகில் அடியவனாகிய சிறியேன் உன்னுடைய திருவடிக்கு இப் புகழ்மாலை சூட்டுகின்றேன்; ஆதலால் இதனை அணிந்தருளுவாயாக. எ.று.
மாதவம் - பெரிய தவம். வான் அமுது - வானுலகத்துத் தேவர்கள் உண்ணும் அமுதம். மகிழ்ச்சி தரும் பரம்பொருளை “மகிழ்வு” என்று கூறுகின்றார். போது - அவத்தால் கழித்தல்; அதாவது வாழ்நாளை பயனில்லாத வகையில் கழித்தல். தீது -அவத்தை. பிறப்பு - குற்றமும் துன்பமும் நிறைந்த மக்கட் பிறப்பு. தன்னைச் சிவமாக்கிக் கொண்டமை விளங்க, “சிவமாகும் பிறப்பாச் செய்வித்த என் அவத்தை எல்லாம் தீர்த்த பெரும்பொருளே” என்று போற்றுகின்றார். பூதலம் - நிலவுலகம். புகழ்மாலை - புகழை எடுத்துரைக்கும் சொல் மாலை. அமுதமே வாழ்வே கண்மணியே மகிழ்வே பொன்னே அரசே பெரும் பொருளே நினது திருவடிக்குப் புகழ்மாலை சூட்டுகின்றேனாதலால் இதனையேற்று அணிந்தருளுக என்பது கருத்து. (2)
|