5474. ஒளியாகி உள்ஒளியாய் உள்ஒளிக்குள் ஒளியாய்
ஒளிஒளியின் ஒளியாய்அவ் ஒளிக்குளும்ஓர் ஒளியாய்
வெளியாகி வெளிவெளியாய் வெளியிடைமேல் வெளியாய்
மேல்வெளிமேல் பெருவெளியாய்ப் பெருவெளிக்கோர் வெளியாய்
அளியாகி அதுஆகி அதுவும்அல்லா தாகி
அப்பாலாய் அப்பாலும் அல்லதுவாய் நிறைவாம்
தளியாகி எல்லாமாய் விளங்குகின்ற ஞான
சபைத்தலைவா நின்இயலைச் சாற்றுவதெவ் வணமே.
உரை: ஒளியாய் அதன் உள்ளொளியாய் அவ்வுள்ளொளிக்கு உள்ளொளியாய் ஒளிக்குக் காரணமாகிய மூல ஒளியாய் அம்மூல ஒளிக்கும் ஓர் ஒளியாயும் ஒளி பரவும் வெளியாகி அவ்வெளிக்கு வெளியாய் அவ்வெளியிடை மேல் நிலவும் வெளியாய் அதன்மேல் நிலவும் பெருவெளியாய் அப்பெருவெளிக்கு ஒரு வெளியாயும் அருளாயும் அல்லாதாகியும் அதற்கு அப்பாலாய் அப்பாலுக்கும் அல்லதுமாய் நிறைவாகியும் எல்லாவற்றிற்கும் ஒரு கோயிலாய் எல்லாமாயும் விளங்குகின்ற ஞானசபைக்குத் தலைவனே! நினது இயல்பை ஓதுவது என்பது எவ்வாறாகும். எ.று.
ஒளியாகியும், ஒளிக்குள் ஒளியாகியும், ஒளிகட்கெல்லாம் காரண ஒளியாகியும், ஒளிகள் பரவும் வெளியாகியும், மேல் வெளியாகியும், அதற்கு மேல் பெருவெளிக்கு வெளியாகியும், அருளாகியும், அதுவும் அல்லாதாகியும், அதற்கு அப்பாலும் அல்லதுமாய்ப் பரிபூரண நிறைவு உடையதாகியும், எல்லாம் தனக்குள் உறையும் கோயிலாகியும் விளங்குவது ஞான சபை என்றும், அந்த ஞான சபைக்குத் தலைவனாகிய சிவபெருமானுடைய இயல்புகளை நுணுகி அறிந்து எடுத்துரைப்பது எளிதில் ஆகாத ஒன்று என்றும் கூறியவாறாம். (8)
|