பக்கம் எண் :

5483.

     தேனே கன்னல் செழும்பாகே
          என்ன மிகவும் தித்தித்தென்
     ஊனே புகுந்தென் உள்ளத்தில்அமர்ந்
          துயிரில் கலந்த ஒருபொருளை
     வானே நிறைந்த பெருங்கருணை
          வாழ்வை மணிமன் றுடையானை
     நானே பாடிக் களிக்கின்றேன்
          நாட்டார் வாழ்ந்த நானிலத்தே.

உரை:

     தேனும் கரும்பின் செழும்பாகும் போல மிகவும் தித்தித்து என் உடம்பில் புகுந்து உள்ளத்தில் தேங்கி உயிரோடு கலந்துகொண்ட ஒப்பற்ற பொருளும், வானுலகம் எல்லாம் நிறைந்த பெரிய கருணை புரிந்த வாழ்வைத் தருவதும், அழகிய திருச்சிற்றம்பலத்தை உடைய பரம்பொருளுமாகிய சிவபெருமானை நாட்டில் உள்ளவர்கள் எல்லாரும் என்னை வாழ்த்தி மகிழுமாறு நான் பாடி மகிழ்கின்றேன். எ.று.

     கன்னல் - செழும்பாகு; கரும்பின் தெளிந்த சாற்றைக் காய்ச்சிய வழி உளதாகும் வெல்லப் பாகு. ஊன் - உடம்பு. ஒரு பொருள் என்றது பரம்பொருளை. வாழ்வு தருபவனை வாழ்வு என்றது உபசாரம். நானிலம் - குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற நான்குமாம்.

     (7)