பக்கம் எண் :

5484.

     நிலத்தே அடைந்த இடர்அனைத்தும்
          நிமிடத் தொழித்தே நிலைபெற்றேன்
     வலத்தே அழியா வரம்பெற்றேன்
          மணிமன் றேத்தும் வாழ்வடைந்தேன்
     குலத்தே சமயக் குழியிடத்தே
          விழுந்திவ் வுலகம் குமையாதே
     நலத்தே சுத்த சன்மார்க்கம்
          நாட்டா நின்றேன் நாட்டகத்தே.

உரை:

     நிலவுலகத்தில் எனக்குற்ற துன்பங்கள் எல்லாவற்றையும் ஒருகணப் பொழுதில் போக்கி நிலைத்த இயல்பைப் பெற்று அருள் வலியால் அழியா வரம் பெற்று அழகிய திருச்சிற்றம்பலத்தை வழிபட்டு வாழும் இன்ப வாழ்வைப் பெற்றுக் கொண்டேன்; அன்றியும் குலம் கருதும் உலகியலிலும் சமயமாகிய குழியிலும் இவ்வுலகம் விழுந்து கெடாதபடி நலம் விளங்கும் சுத்த சன்மார்க்கமாகிய நெறியை நிலை பெறுவிக்கின்றேன். எ.று.

     இப்பாட்டில் நிலம் என்றும் உலகம் என்றும் நாடு என்றும் வருவன பொதுவாக நாட்டையே குறிக்கின்றன. வலம் என்பது திருவருளால் உண்டாகும் மனவன்மை. உயர்குலம் என்றும் இழிகுலம் என்றும் பேசுவது உலகியலாதலின் அதனைக் “குலம்” எனத் தனிப்பட மொழிகின்றார். சமய வெறி கொண்டவர் அதனின்றும் மீளாது உழலுதலின் சமயவாழ்வை, “சமயக் குழி” என்று இழிக்கின்றார். குமைதல் - அழிதல். நாட்டுதல் - நிலைபெறுவித்தல்.

     (8)