பக்கம் எண் :

New Page 1

வெண்பா

553.

    உலகம் பரவும் ஒருமுதல்வா தெய்வத்
    திலகம் திகழிடத்துத் தேவே - இலகுதிருப்
    புள்ளிருக்கு வேளூர்ப் புனிதா அடியேன்றன்
    உள்ளிருக்கும் துன்பை ஒழி.

உரை:

     உலகத்தவ ரெல்லாம் பணிந்து வழிபடுகின்ற ஒப்பற்ற முதல்வனே, தெய்வங்களுக்கெல்லாம் திலகமாய் விளங்குகின்ற தேவர்களின் இடையே சிறக்கின்ற தேவர் தேவனே, வளம் மிக்கு விளங்குகின்ற புள்ளிருக்கு வேளூரின் கண் எழுந்தருளும் புனிதனே, அடியேனுடைய மனத்துள் இருந்து வருத்துகின்ற துன்பத்தை ஒழிப்பாயாக, எ. று.

     “முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை” என்ற உலகுரை பற்றி, “உலகம் பரவும் ஒருமுதல்வா” என்கிறார். “உலகம் உவப்ப” (முருகு) என நக்கீரர் முதனிலை விளக்காக உரைப்பது காண்க. தெய்வங்களால் தொழப்படும் தெய்வங்கள் இங்குத் “தெய்வத் திலகம்” எனப்படுகின்றன. அத்தெய்வங்களிடையே சிறந்து விளங்குமாறு தோன்றத் “திலகம் திகழ் இடத்துத் தேவே” என்கிறார். “தொழப்படுந் தேவர் தொழப்படு வானைத் தொழுதபின்னைத் தொழப்படுந் தேவர்தம் மால்தொழு விக்கும்தன் தொண்டரையே” (தனித்திருவிருத்தம்) என்று அப்பரடிகள் கூறுவது போல. புனிதன் - தூயவன். துன்பம் உள்ளத்தே யிருந்து வருந்துவதால், “உள்ளிருக்கும் துன்பை ஒழி” என்று சொல்கின்றார்.

     இதனால், மனத்தின் உட்கிடந்து வருத்தும் துன்பம் துடைத்தற்கு வழிகூறியவாறாம்.

     (4)